ததியுறு மத்தின் சுழலும்
என் ஆவி,
தளர்வு இலது
ஓர்
கதியுறுவண்ணம் கருது
கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும்,
மாலும், வணங்கி,
என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன
சுந்தரியே.
ஜீவசமாதிகள்
வீடு அல்லது கோவில்கள் வழங்கும் அமைதியைத் தாண்டி, தியானத்தில் அடுத்த நிலைக்குச் செல்ல விரும்புவோருக்கு மகான்களின் ஜீவசமாதிகள் ஒரு வரப்பிரசாதமாகும். அங்கே நிலைபெற்றுள்ள உயர்நிலை அதிர்வுகள், உங்கள் தியானத்தை மிக எளிதாக ஆழப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அடியேன் அறிந்த மற்றும் தியானத்திற்கு மிகவும் உகந்த சில இடங்களைப் பட்டியலிடுகிறேன்:
சுவாமி
சிவானந்தர் தவவனம் & பாவாடை சுவாமிகள் சமாதி, பெங்காலன் ஹுலு, பேராக்.
ஸ்ரீ
ரங்கநாத சுவாமிகள் மடாலயம், புக்கிட் டும்பார், பினாங்கு.
மௌன
குரு சமாதி, பத்துமலை (Batu Caves).
ஜெகநாத
சுவாமிகள் சமாதி, தாப்பா, பேராக்.
சன்னாசிமலை
ஆண்டவர் சமாதி, மலாக்கா.
சூட்சும வடிவில் மகான்கள்:
நமது தேசத்தில் எண்ணற்ற மகான்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இந்தத் திருத்தலங்களில் மகான்கள் தங்களின் சூட்சும வடிவில் (Invisible form) நிலைத்திருந்து, தேடி வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றனர். தெய்வீக அதிர்வுகள் நிறைந்த இத்தகைய இடங்களில் அமர்ந்து தியானம் செய்யும் வாய்ப்பு கிடைப்பது நாம் செய்த பெரும் பாக்கியமாகும்.
அருளொளியும் ஆத்மார்த்த நிலையும்:
ஜீவசமாதிகளில் இருந்து வெளிப்படும் அந்த ஞான ஒளியானது நம்மீது படும்போது, சொல்லொண்ணா பரவச நிலையை அடையலாம். இத்தகைய புனித இடங்களுக்குச் செல்லும்போது தனித்துச் செல்வதைத் தவிர்த்து, ஒரு சிறு குழுவாகச் செல்வது நலம். மேலும், அன்று நாள் முழுவதும் சைவ உணவை மட்டுமே உட்கொள்வது, அந்த இடத்தின் அதிர்வுகளை உள்வாங்க உடல்நிலைக்கும் மனநிலைக்கும் ஏதுவாக அமையும்.
பிரம்ம முகூர்த்த தியானம்:
பகல் நேரங்களிலும் தியானம் செய்யலாம் என்றாலும், அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் (3:30 AM - 5:30 AM) செய்யும் தியானம் அளப்பரிய ஆற்றலை வழங்கும். அந்தப் புனிதமான நேரத்தில் நாம் மட்டும் தனியாகத் தியானம் செய்வதில்லை; சூட்சும நிலையில் பல யோகிகளும் சித்த புருஷர்களும் அங்கே தியானத்தில் வீற்றிருப்பார்கள் என்பதே அதன் விசேஷம்.
அதிர்வுகளும் கவனிக்க வேண்டியவையும்:
அங்கு தியானிக்கும்போது உங்களால் அந்தத் தெய்வீக அதிர்வுகளை உணர முடியும்; அதற்கு அச்சப்படத் தேவையில்லை. ஆனால், ஜீவசமாதிகளில் இருக்கும்போது நாவடக்கம் மிக அவசியம். தேவையற்ற உரையாடல்கள், கேலிப் பேச்சுகள் அல்லது கிண்டல்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். நமது அற்பமான செயல்கள் அங்கு சூட்சுமமாக இருக்கும் மகான்களின் தியானத்திற்குத் இடையூறாக அமையலாம். அத்தகைய தவறுகள் நேர்ந்தால், ஏதோ ஒரு வகையில் நாம் அங்கிருந்து வெளியேற்றப்படுவோம். எனவே, தூய்மையான எண்ணங்களோடும் ஆழ்ந்த அமைதியோடும் இருப்பது அவசியம்.
நீரோடை தியானத்தின் சிறப்பு:
ஜீவசமாதிகளுக்கு அடுத்தபடியாக, தியானம் செய்வதற்கு மிகவும் உகந்த இடம் குளிர்ந்த நீரோடைகள் ஆகும். சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் தூய நீரில் அமர்ந்து தியானிப்பதன் மூலம், பிரபஞ்ச ஆற்றலை மிக எளிதாக உடல் உள்வாங்கிக் கொள்ளும். உயர்ந்த எண்ணங்களோடும், தூய்மையான மனதோடும் அங்கு அமர்ந்தால், சொல்லொண்ணா பல அற்புதங்களை உங்களால் நேரில் உணர முடியும்.
நேரத்தின் முக்கியத்துவம்:
மற்ற நேரங்களை விட, அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் (3:30 AM – 5:30 AM) நீரோடையில் அமர்ந்து தியானம் செய்வது அபாரமான ஆற்றலைத் தரும். இயற்கையோடு ஒன்றிப்போகும் அந்த அமைதியான நேரத்தில், மனமானது மிக விரைவில் ஒருநிலைப்படும்.
சோதனைகளும் மனோதைரியமும்:
இத்தகைய இயற்கைச் சூழலில் தியானம் செய்யும்போது, சில நேரங்களில் அமானுஷ்யமான சோதனைகள் அல்லது மனதை அலைபாயச் செய்யும் உணர்வுகள் ஏற்படலாம். அவற்றை எதிர்கொள்ள உறுதியான மனோதைரியமும், இறை நம்பிக்கையும் மிக அவசியம்.
பாதுகாப்பு வழிமுறை:
அமானுஷ்ய அனுபவங்கள் மற்றும் நிலப்பரப்பின் சவால்கள் காரணமாக, இத்தகைய இடங்களுக்குத் தனியாகச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது தியானப் பயிற்சி உள்ளவர்களுடன் இணைந்து செல்வதே பாதுகாப்பானது மற்றும் சிறப்பானது.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment