Saturday, 1 August 2020

முதியவர்களுக்கு....

 


கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை

ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்

காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,

ஆட்டியவா நடம்--ஆடகத் தாமரை ஆரணங்கே.

முதியவர்களுக்கு...........


குரு அல்லது ஆன்மீக வழிகாட்டி உள்ளவர்கள் அவர்கள் காட்டும் வழியில் செல்லுங்கள். தியானம் தெரிந்தவர்கள் அந்தப் பயிற்சியைத் தொடருங்கள்

குரு இல்லாதவர்கள், முடிந்தால்  அடியேன் சொல்லும் இந்தப் பயிற்சிகளை முயற்சி செய்து பாருங்கள்.

வாழ்க்கையின் நிறைவுப் பகுதியில் இருக்கும் உங்களுக்கான சில ஆலோசனைகள்:

உங்களுக்கென்று ஒரு தனிச் சேமிப்பு இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் உழைக்கும் காலத்திலேயே சிறுகச் சிறுகச் சேமித்து வையுங்கள்; பிற்காலத்தில் அது உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். முடிந்தவரை உங்கள் பிள்ளைகளாகவே இருந்தாலும், மற்றவர் கையை எதிர்பார்க்காமல் வாழப் பழகுங்கள். உங்கள் சொத்துகளுக்கோ அல்லது சேமிப்பிற்கோ முறையான வாரிசுதாரரை நியமிக்க மறக்காதீர்கள். வாரிசு எழுதி வைத்துவிட்டால் 'எனக்கென்று ஒன்றும் இல்லையே' என்று பயப்படத் தேவையில்லை; ஏனெனில் வாரிசு என்பது உங்களுக்குப் பிறகு உங்கள் சொத்துகள் முறையாகப் பிள்ளைகளைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே.


அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது: அருகாமையில் கோவில் இருந்தால் காலை, மாலை இருவேளையும் நடந்தே சென்று வாருங்கள். செல்லும்போது பூக்களைப் பறித்து, முடிந்தால் மாலையாகத் தொடுத்துத் தெய்வத்திற்குச் சாற்றுங்கள். பிறகு அங்கே சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். கோவிலில் கைபேசிப் பயன்பாட்டைத் தவிர்த்திடுங்கள்.


இரவில் வெகுநேரம் கண்விழிக்காமல் 10 மணிக்குள் உறங்கச் செல்லுங்கள். காலையில் 6:00 மணி முதல் 6:30 மணிக்குள் எழ முயலுங்கள். தினமும் காலை, மாலை இருவேளையும் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். காலை, மதிய மற்றும் இரவு உணவுகளைக் குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ளுங்கள். உணவில் உப்பு, இனிப்பு மற்றும் காரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். சைவ உணவுகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். வயது கூடக் கூட நமது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்து ஜீரண ஆற்றலும் மந்தமாகும் என்பதால், அசைவ உணவை விட எளிதில் செரிக்கக்கூடிய சைவ உணவே சிறந்தது."


"உங்கள் குலதெய்வம், இஷ்டதெய்வம், மஹான்கள் அல்லது குருவின் திருவுருவப் படத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள். இரவில் உறங்குவதற்கு முன்பும், காலையில் எழுந்தவுடனும் அந்தத் திருவுருவத்தை தரிசித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள்.


அடுத்து, இயலுமானால் நான் கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சிகளைச் செய்து பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த ஒரு ஆசனத்தில் (யோகாசனம் அல்லது சுகாசனம்) அமர்ந்து இதனைப் பழகலாம். 'ஆசனம்' என்பது நாம் அமரும் நிலையைக் குறிக்கும். இதில் மொத்தம் 108 வகைகள் உள்ளன. உங்களால் இயன்ற ஒரு ஆசனத்தைத் தேர்வு செய்து தியானியுங்கள். ஆனால், ஒருமுறை தேர்ந்தெடுத்த ஆசன முறையை அடிக்கடி மாற்றாமல், இறுதிவரை அதையே பின்பற்றுங்கள். உங்களுக்கு முதுகுவலி அல்லது மூட்டுவலி இருந்தால், உடலை வருத்திக்கொள்ளாமல் 'சுகாசனத்தில்' அமர்ந்து தியானம் செய்யுங்கள். தியானத்தின்போது நமது முதுகுத்தண்டு மற்றும் தலை நிமிர்ந்த நிலையில் இருப்பது அவசியம்.


நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. நாம் நேராக நிமிர்ந்து அமரும்போது மட்டுமே அவற்றைச் சீராக இயக்க முடியும்.


இப்பயிற்சியைத் தொடங்கும் முன், உங்கள் குலதெய்வத்தை அல்லது இஷ்டதெய்வத்தை மனதார வணங்கித் தொடங்குங்கள்; முடிக்கும்போதும் அவ்வாறே வணங்கி எழுங்கள். நீங்கள் இப்பயிற்சிகளைச் செய்யும்போது எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் இருக்கவும், உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கவும் குலதெய்வ வழிபாடு துணைநிற்கும். முதலில் 10 நிமிடங்கள் எனத் தொடங்கி, பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்.


தியானப் பயிற்சி:

1. உங்கள் உடலையும் மனதையும் தளர்வாக (Relax) வைத்துக்கொள்ளுங்கள். பார்ப்பது, யோசிப்பது, பேசுவது, கேட்பது போன்ற புற இயக்கங்களை நிறுத்திவிடுங்கள். மெதுவாகக் கண்களை மூடி, அந்த அமைதியான நிலையிலேயே இருக்கப் பழகுங்கள். அல்லது..."

"2. மந்திரத் தியானம்: உங்கள் உடலையும் மனதையும் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். பார்ப்பது, பேசுவது, கேட்பது போன்ற புற இயக்கங்களை நிறுத்தி, மெதுவாகக் கண்களை மூடுங்கள். மனதிற்குள் உங்களுக்குத் தெரிந்த அல்லது பிடித்தமான மந்திரத்தை அல்லது ஸ்லோகத்தைத் தொடர்ந்து உச்சரித்தபடி இருங்கள்.

3. உருவத் தியானம்: உங்கள் உடலையும் மனதையும் லேசாக்கிக் கொள்ளுங்கள். மெதுவாகக் கண்களை மூடி, புருவ மத்தியின் (ஆக்ஞா சக்கரம்) உள்முகமாக உங்கள் குலதெய்வத்தையோ அல்லது இஷ்டதெய்வத்தையோ நிலைநிறுத்தித் தரிசிக்க முயலுங்கள்.

மேலே குறிப்பிட்ட மூன்று பயிற்சிகளும் தனித்தன்மை வாய்ந்தவை. இப்பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், காலப்போக்கில் உங்களுக்குள் ஏற்படும் ஆச்சரியமான மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.


முக்கியக் குறிப்புகள்:


உணவு உண்டவுடன் இந்தப் பயிற்சிகளைச் செய்யக் கூடாது; குறைந்தது 4 மணிநேரம் இடைவெளி அவசியம். ஏனெனில், உணவு ஜீரணமாவதற்கு உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும் என்பதால், தியானம் செய்யும்போது உங்களால் கவனம் செலுத்த முடியாது, உறக்கமே மேலோங்கும்.


அதிகப் பசியோடு இருக்கும்போதோ அல்லது இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டோ ஒருபோதும் தியானம் செய்யாதீர்கள்.


இளைய தலைமுறையினர் இன்னும் வாழ்க்கைப் போராட்டங்களில் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அனைத்தையும் கடந்து ஒரு பக்குவ நிலைக்கு வந்துவிட்டீர்கள். உங்கள் தேடல் இப்போது அமைதியையும் இறைவனையும் நோக்கியே இருக்கும். எனவே, தியானத்தில் அமரும் நேரத்தைப் படிப்படியாக அதிகரியுங்கள். உடல்நிலை காரணமாக அதிக நேரம் அமர முடியாதவர்கள் உங்களால் முடிந்த அளவு செய்யுங்கள்.


உடல்நலம் குன்றியவர்கள் பக்திப் பாடல்களைக் கேளுங்கள் அல்லது வாசியுங்கள். குறிப்பாகக் கந்தர் சஷ்டி கவசம், சண்முக கவசம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அபிராமி அந்தாதி போன்றவை மனதிற்குத் திண்மையையும் நிம்மதியையும் தரும். அதற்கு முன்னோட்டமாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள அபிராமி அந்தாதி பாடலைத் தினமும் பாராயணம் செய்யுங்கள்."


அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்

தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகைசேர் நயனக்

கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,

சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே.

58-வது பாடல்


நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று, "வாழ்க வளமுடன்" என்ற மந்திரச் சொல். ஆகவே, இந்த வார்த்தையை அடிக்கடி உச்சரியுங்கள். இது மிகவும் சக்திவாய்ந்த மங்களச் சொல். இச்சொல்லைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கையில், அது நமக்கும் மற்றவர்களுக்கும் நல்ல அதிர்வலைகளை உருவாக்கும். மற்றவர்களிடம் அலைபேசியில் பேசும்பொழுது, "வணக்கம், வாழ்க வளமுடன்" என்று உரையாடலைத் தொடங்குங்கள். நீங்கள் மற்றவர்களைச் சந்திக்கும் பொழுதும் "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்துங்கள்.


நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பவர்களாக இருந்தால், முதலில் நாடகங்கள் (Serial) பார்ப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், முதியவர்கள் இத்தகைய நாடகங்களைப் பார்ப்பதால் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அவற்றைத் தவிர்த்து, மனதிற்கு நிம்மதி தரக்கூடிய நிகழ்ச்சிகளைப் பாருங்கள். உதாரணமாக, உங்களுக்குப் பிடித்த பழைய பாடல்கள், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் காணலாம்.


உங்களுக்கு நிலம் இருந்தால் பயிர் செய்யுங்கள். காய்கறிகளும், பூக்களும் பூத்துக் குலுங்குவதைக் கண்டு ரசியுங்கள். செடிகளையும் பூக்களையும் அன்புடன் வருடித் தடவிக் கொடுங்கள். பறவைகளுக்கு உணவளித்து, அவை உண்பதைப் பார்த்து மகிழுங்கள். இவையெல்லாம் உங்கள் மனதிற்குச் சிறந்த ஆரோக்கியத்தைத் தரவல்லவை.


ஒரு முக்கியமான குறிப்பு:


இது பரவலாக வயதானவர்களிடம் காணப்படும் ஒரு மனக்குமுறல். அதாவது, "தன்னுடைய குழந்தைகள் தன்னிடம் பேசுவதில்லை, பேரக்குழந்தைகள் தம்மைக் கண்டுகொள்வதில்லை; அவர்களை நாங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தோம்" என்று எண்ணி வருத்தப்பட்டுக்கொண்டே இருக்காதீர்கள். பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும், அவர்களை வளர்த்து, ஆளாக்குவதும் நம் கடமை. அதற்காக, அவர்கள் (கட்டாயம்) நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல. இதைச் சொல்லும் என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.


கடைசிக் காலத்தில் பிள்ளைகள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கத் தேவையில்லை. அப்படி அவர்கள் நம்மை அன்புடன் கவனித்துக்கொண்டால், அதை ஒரு வரமாக நினைக்கலாம். சற்று யோசித்துப் பாருங்கள்; நாம் வாழ்ந்த காலம் வேறு, இன்றைய காலம் வேறு. இப்போது பணத்தேவை அதிகரித்துவிட்டதால், கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பிறகு பிள்ளைகள் என்று வந்துவிட்டால், அவர்களின் பொறுப்புகளும் கடமைகளும் இன்னும் அதிகரிக்கும்.


இத்தகைய பணிச்சுமையின் காரணமாக, அவர்கள் சில நேரங்களில் நம்மைச் சரியாகக் கவனிக்க முடியாமல் போகலாம். இதுவே இன்றைய சராசரி குடும்பத்தின் யதார்த்த நிலை. ஆகையினால், வீட்டில் உள்ள முதியவர்கள் நிலைமையை உணர்ந்து, அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்கள் நம்மை ஒரு பாரமாகவோ அல்லது இடைஞ்சலாகவோ நினைக்கக் கூடாது. அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்குத் தோன்றிவிட்டால், அதன் விளைவு என்னவாகும்? உங்களைக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவார்கள். ஆரம்பத்தில் மாதம் இருமுறை வருவார்கள்; பிறகு அது மாதமொரு முறையாகும்; பிறகு வருடத்திற்கு ஒருமுறை எனத் தள்ளிப்போகும்; இறுதியில் வருவதையே நிறுத்திவிடுவார்கள். எனவே, மனதளவில் நீங்கள் எதற்கும் உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.


வாழ்க வளமுடன்.




.

No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...