உருவாய்
அருள்வாய் உளதாய் இலதாய் ,
மருவாய்
மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய்
உயிராய் கதியாய் விதியாய் ,
குருவாய்
வருவாய் அருள்வாய் குகனே
இனி, ஆன்மீகத்தில் ஈடுபட விரும்பும் நடுத்தர வயதினருக்கு ஏற்ற ஆலோசனைகள்.
இங்கு,
குரு உள்ளவர்கள் அல்லது / ஆன்மிக வழிகாட்டி உள்ளவர்கள் அவர்கள் காட்டும் வழியில் செல்லுங்கள்.
தியானம்
தெரிந்தவர்கள் தியானம் செய்யுங்கள்.
குரு
இல்லாதவர்கள் முடிந்தால், நான் சொல்லும் பயிற்சிகளை முயற்சி செய்துப்பாருங்கள்.
அதற்குமுன் ஒரு அன்பான வேண்டுகோள்: எந்தச் சூழ்நிலையிலும் மற்றவர்களுடைய வழிபாட்டு முறைகளைக் கேலியோ கிண்டலோ செய்யாதீர்கள். அது அவரவர் நம்பிக்கை. இறை வழிபாடு என்பது அனைவருக்கும் பொதுவானது. அமெரிக்காவிலிருந்து பார்த்தாலும் சரி, ஆசியாவிலிருந்து பார்த்தாலும் சரி, சூரியனும் சந்திரனும் ஒன்றே; பார்க்கும் இடம்தான் வேறு. காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் போன்றவை எப்படி அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானவையோ, அதுபோலவே இறைவனும் அனைவருக்கும் பொதுவானவன்.
உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் மனிதர்களை நல்வழிப்படுத்தவே உருவாயின. எந்த மதமும் ஒரு மனிதனைத் தவறான பாதையில் செல்லச் சொல்லவில்லை. எல்லா மதங்களும் மனிதனை மனிதனாக வாழச் சொல்கின்றன. ஆகையினால், எந்தச் சூழலிலும் பிற மதத்தையோ அல்லது அவர்களின் வழிபாட்டு முறையையோ குறை சொல்லாதீர்கள். வழிகள் பலவாயினும் போய்சேருமிடம் ஒன்றே.
எந்த ஒரு விஷயத்தையும் அனுபவரீதியாக உணராதவரை, நீங்கள் அதனை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
ஆன்மிகம் என்றால் ஒரு சந்நியாசியாக மாறிவிடுவதோ, குடும்பத்தைத் துறந்து செல்வதோ அல்லது குடும்பப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதோ அல்ல. ஆன்மிகம் என்பது நீங்கள் ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்து, இறைவனை நோக்கி மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரையாகும்.
சதா தியானத்தில் இருக்கும் துறவியைவிட, இல்லறத்தில் இருப்பவர்களுக்கு இறை அருள் விரைவில் கிட்டும். ஏனென்றால், துறவிக்கு முக்தியடைவது மட்டுமே ஒரே குறிக்கோள். ஆனால், இல்லறத்தில் உள்ள ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும், இன்ப துன்பங்களையும் கடந்து ஆன்மிகத்தில் ஈடுபடும்போது, இறைவன் அவனை விரைவில் ஆட்கொள்கிறான்.
ஆன்மிகம் என்றால் காட்டிற்குப் போக வேண்டும் அல்லது மலைக்குச் செல்ல வேண்டும் என்பதல்ல. இறையருள் எங்கும் நிறைந்துள்ளது; நாம் இருக்கும் இடத்திலிருந்தே அதனைப் பெற முடியும். அதற்குத் தேவை அமைதியான மனநிலையும் சூழ்நிலையும் மட்டுமே.
ஆண், பெண் இருபாலரும் ஆன்மிகத்தில் ஈடுபடலாம்; இதில் தவறேதுமில்லை. ஆனால், இல்லற வாழ்க்கையில் இருப்பவர் முதலில் தன் குடும்பத்திற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது செய்து முடிக்க வேண்டும். ஒரு நல்ல கணவனாக, மனைவியாக, பொறுப்புள்ள பெற்றோராக, மற்றும் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்க. குடும்ப வாழ்க்கை ஆன்மிகத்திற்கு ஒரு தடையல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.
ஆன்மிகத்தில் ஈடுபட விரும்பும் உங்களுக்கு ஒரு குரு, மகான் அல்லது யோகி வழிகாட்டியாக இருப்பது அவசியம். அதுவே சரியானதும் பாதுகாப்பானதும் ஆகும். அந்த குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? ஆன்மிகத்தில் தான் உன்னத நிலையை அடைந்த பிறகு, மற்றவர்களும் அந்த நிலையை அடையத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குபவரே உண்மையான குரு ஆவார்.
"எனது தெய்வம், எனது பூஜை, எனது வழிபாடு இருக்கும்போது இடையில் ஒரு குரு எதற்கு?" என்று சிலர் கேட்கலாம். ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இது பொருந்தும். ஆனால், ஆன்மிகத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல, அதாவது உருவ வழிபாட்டிலிருந்து அருவ வழிபாட்டிற்கு மாற, குருவின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்.
உங்களுக்குக் குருவைத் தேடியும் கிடைக்கவில்லை அல்லது மனதிற்குத் திருப்தி ஏற்படவில்லை என்றால் கவலை வேண்டாம். இந்த உலகில் எத்தனையோ மகான்கள், ஞானிகள், யோகிகள் மற்றும் அவதாரங்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். குறிப்பாக, ராமகிருஷ்ண பரமஹம்சர், இராமலிங்க சுவாமிகள், பூண்டி மகான், ரமண மகரிஷி, சீரடி பாபா, பாம்பன் சுவாமிகள், சேஷாத்திரி சுவாமிகள், நடமாடும் தெய்வமான காஞ்சி மகா பெரியவர், ஜெகநாத சுவாமிகள், சிவானந்த பரமஹம்சர், யோகி ராம்சுரத்குமார், சித்ரமுத்து அடிகளார் என இன்னும் பலர் உள்ளனர். இவர்களில் ஒருவரை உங்கள் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வணங்கி வாருங்கள். நம்மிடையே வாழ்ந்து மறைந்த இவர்கள், இன்றும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டு, தங்களை நாடி வருபவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்கள். உங்களின் தியானம் உண்மையானதாகவும், உறுதியானதாகவும், உயர்ந்த நோக்கத்தைக் கொண்டதாகவும் இருந்தால், அவர்களின் ஆசியும் அருட்சக்தியும் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.
சித்தர்கள் மேல் ஈடுபாடு உள்ளவர்கள், பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரைக் குருவாகக் கொள்ளலாம். இந்த வரிசையில் பட்டினத்தார் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம். வாய்ப்பு கிடைத்தால், அந்தச் சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு ஒரு முறையாவது சென்று வணங்கி வாருங்கள்.
சட்டையை மாற்றுவது போல் அடிக்கடி குருவை மாற்றிக் கொண்டிருக்காதீர்கள்; அது நல்லதல்ல. ஒருவரையே குருவாகக் கொண்டு, அவரிடம் முறையாகப் பயிற்சி பெறுங்கள். குரு கற்பித்த பயிற்சிகளை முழுமனதுடன் விடாமல் செய்து வாருங்கள். உடனே பலனை எதிர்பார்க்கக் கூடாது; மாற்றங்கள் படிப்படியாகத்தான் நிகழும்.
நம் நாட்டிலும் (மலேசியா) பல சித்தர்கள், மகான்கள் மற்றும் யோகிகள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். உதாரணமாக, பாவாடை சுவாமிகள் (Pengkalan Hulu, Perak), ரங்கநாத சுவாமிகள் (Bukit Dumbar, Penang), ஜெகநாத சுவாமிகள் (Tapah, Perak), சன்னாசிமலை ஆண்டவர் (Melaka), மௌன குரு சுவாமிகள் (Batu Caves, Selangor) எனப் பல ஜீவசமாதிகள் நம் நாட்டிலும் உண்டு. இன்றும் பலர் மறைந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் இருப்பைப் படிப்படியாகத்தான் உணர முடியும்.
அடுத்து, அடியேன் கீழே சொல்லும் மிகவும் எளிமையான பயிற்சிகளை முடிந்நால் செய்து பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த ஒரு ஆசனத்தில் (யோகாசனம் அல்லது சுகாசனம்) அமர்ந்து, கீழே குறிப்பிட்டுள்ளவற்றைப் பயிற்சி செய்யுங்கள். 'ஆசனம்' என்பது நாம் அமரும் நிலையைக் குறிக்கும். இந்த ஆசன முறையை அடிக்கடி மாற்ற வேண்டாம்; ஒரே முறையை இறுதிவரை பின்பற்றுங்கள். உங்களுக்கு முதுகுவலி அல்லது மூட்டுவலி இருந்தால், சுகாசனம் (சாதாரணமாகக் கால் மடித்து அமர்தல்) இட்டே தியானம் செய்யுங்கள். உடலை வருத்திக்கொண்டு எதனையும் செய்ய வேண்டாம். தியானத்தின் போது முதுகுத்தண்டும் தலையும் நேராக இருப்பது நன்று. ஏனெனில், உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் நேர்க்கோட்டில் அமைந்துள்ளன; நேராக அமரும்போது அவற்றினை எளிதாகத் தூண்ட முடியும்.
இப்பயிற்சியைத் தொடங்கும் முன், முதலில் உங்கள் குலதெய்வத்தையோ அல்லது இஷ்டதெய்வத்தையோ மனதார வணங்கித் தொடங்குங்கள்; முடிக்கும்போதும் அவ்வாறே வணங்கிவிட்டு எழுங்கள். ஏனெனில், நீங்கள் இந்தப் பயிற்சிகளைச் செய்யும்போது எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாமல் இருக்க இது உதவும். குலதெய்வம் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கித் தரும். இனி, நீங்கள் இப்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வமே குருவாக இருந்து வழிகாட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முதலில் 5 நிமிடங்கள் மட்டும் பயிற்சியைச் செய்யுங்கள்; பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
பயிற்சி முறைகள்:
1. உங்கள் உடலையும் மனதையும் தளர்வாக (Relax) வைத்துக்கொள்ளுங்கள். பார்ப்பது, யோசிப்பது, பேசுவது, கேட்பது போன்ற அனைத்து இயக்கங்களையும் நிறுத்திவிட்டு, மெதுவாகக் கண்களை மூடுங்கள். அந்த அமைதியான நிலையிலேயே இருக்கப் பழகுங்கள்.
அல்லது...
2. உங்கள் உடலையும் மனதையும் தளர்வாக வைத்துக்கொண்டு, புற உலக இயக்கங்களை நிறுத்தி மெதுவாகக் கண்களை மூடுங்கள். கண்களை மூடியவாறு, மனதிற்குள் உங்களுக்குத் தெரிந்த மந்திரத்தையோ அல்லது ஸ்லோகத்தையோ தொடர்ந்து உச்சரித்து வாருங்கள்.
அல்லது...
3. உங்கள் உடலையும் மனதையும் தளர்வாக வைத்துக்கொண்டு, அனைத்துப் புலன் இயக்கங்களையும் நிறுத்தி மெதுவாகக் கண்களை மூடுங்கள். கண்களை மூடியவாறு, உங்கள் புருவ மத்தியில் (ஆக்கினைச் சக்கரம்) குலதெய்வத்தையோ அல்லது இஷ்டதெய்வத்தையோ நிலைநிறுத்தி, அந்தத் தெய்வத்தின் நாமத்தை இடைவிடாமல் சொல்லிக் கொண்டே வாருங்கள்.
இந்த மூன்று முறைகளும் தனித்தன்மை வாய்ந்தவை; இதனை உங்களால் எளிதாகச் செய்ய முடியும். நாட்கள் செல்லச் செல்ல உங்களுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள். அந்த அனுபவங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து வழிகாட்டுங்கள்.
இப்பயிற்சிகளைச் சாப்பிட்டவுடன் செய்யக்கூடாது. உணவு உண்டு குறைந்தது 4 மணி நேரம் கழித்தே தொடங்க வேண்டும். நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகக் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் ஆகும். உணவைச் செரிமானம் செய்ய உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும் என்பதால், அந்த நேரத்தில் உங்களால் பயிற்சியில் கவனம் செலுத்த முடியாது; மாறாகத் தூக்கமே வரும்.
முன்னர் குறிப்பிட்ட மூன்று முறைகளைத் தவிர்த்து இன்னொரு வழிமுறை என்னவென்றால்: முதலில் உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வம் யார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அவற்றிற்குரிய மூல மந்திரத்தைத் தேடித் தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் தியான முறையை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் தொடங்குவது மிகவும் நல்லது.
மந்திரங்களை மூன்று விதமாக உச்சரிக்கலாம்:
• வாக்கினால் உச்சரிப்பது: சற்றே சத்தமாகச் சொல்வது.
• உதட்டளவில் உச்சரிப்பது: முணுமுணுப்பாகச் சொல்வது.
• மனதளவில் உச்சரிப்பது: எண்ணத்தினால் சொல்வது.
இவை மூன்றுமே சரியான முறைகள்தான். உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு முறையைப் பின்பற்றலாம். எனினும், மந்திரங்களை மனதிற்குள் உச்சரிக்கும்போது நீங்கள் மிக விரைவில் அதனுடன் ஒன்றிவிட முடியும். மந்திரங்களில் ஏற்றத்தாழ்வு கிடையாது; அனைத்துமே சக்தி வாய்ந்தவைதான். அவற்றை நாம் உச்சரிக்கும் விதத்தில்தான் அதன் ஆற்றல் வெளிப்படுகிறது.
உதாரணமாக, உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வம் முருகன் என்று வைத்துக்கொள்வோம். அவருக்குரிய மூல மந்திரம் "ஓம் சரவண பவ". முதலில் இம்மந்திரத்தை தினமும் 11 முறை என ஆரம்பித்து, பிறகு படிப்படியாக அந்த எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வாருங்கள். தினமும் குறைந்தது 108 முறை சொல்வது சிறப்பு; அதற்கு மேல் உச்சரிப்பது உங்கள் விருப்பம். இப்படி உங்கள் தெய்வத்தின் மூல மந்திரத்தை முழு மன உறுதியுடன் விடாமல் உச்சரிக்கும்போது, அதன் அதிர்வுகள் அந்தத் தெய்வத்தை சென்றடையும்; அந்தத் தெய்வத்தின் அனுக்கிரகமும் உங்களைத் தேடி வரும்.
மேலே குறிப்பிட்ட நான்கு முறைகளும் தனித்தன்மை வாய்ந்தவை; இவை அனைவராலும் எளிதாகச் செய்யக்கூடியவை. இப்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால், உங்களுக்குள் ஏற்படும் நேர்மறையான மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள். அந்த அனுபவங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து வழிகாட்டுங்கள்.
ஆரம்ப நிலையில் இந்த மந்திரங்களை உச்சரிக்கத் துளசி மாலை, உருத்திராட்ச மாலை அல்லது பூக்களைப் பயன்படுத்தலாம்; பிற்காலத்தில் இவை தேவைப்படாது. "என்னால் தினமும் செய்ய முடியாதே" என்று நினைப்பவர்கள், உங்களால் முடிந்த நாட்களில் மட்டும் இப்பயிற்சியைச் செய்யுங்கள்.
ஆன்மிகத்தில் சாதாரண நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர வேண்டுமென்றால், நாம் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில் முக்கியமானது சைவ உணவைப் பின்பற்றுவதாகும். "அசைவம் சாப்பிட்டால் ஆன்மிகத்தில் ஈடுபட முடியாதா?" என்ற கேள்வி எழலாம். நாம் அசைவ உணவை உட்கொண்ட பின் உடலில் பல ரசாயன மாற்றங்கள் ஏற்படும்; இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்; உடல் உஷ்ணம் உயரும். அதுமட்டுமன்றி, அசைவ உணவு செரிமானம் ஆக அதிக நேரமாகும். உடல் இத்தகைய நிலையில் இருக்கும்போது, எப்படி முழுமனதுடன் தியானத்தில் ஈடுபடவோ அல்லது அமைதியாக மந்திரங்களை உச்சரிக்கவோ முடியும்?
அதனால்தான் முடிந்தவரை சைவ உணவைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறேன். அப்போதுதான் உங்களுக்குள் சாந்தமும் அமைதியும் நிலவும்; முழுமையான தியானமும் கைகூடும். இவைதான் தியானத்திற்கு அடிப்படையான தேவைகள். ஒருவேளை, "என்னால் அசைவ உணவைச் சாப்பிட்டும் தியானம் செய்ய முடியும்" என்று நீங்கள் கருதினால், தாராளமாக முயற்சி செய்து பாருங்கள்.
அடுத்ததாக, இப்பயிற்சிகளைத் தொடங்கும் முன் காலைக்கடன்களை முடித்துவிட்டு அமருங்கள். மேலும், கடும் பசியோடு இருக்கும்போதோ, கோபமாக இருக்கும்போதோ அல்லது உடல் நலக்குறைவு மற்றும் இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டோ தியானம் செய்யாதீர்கள். தியானத்தில் ஈடுபடும்போது உடலும் மனமும் தூய்மையாகவும், தளர்வாகவும் (Relaxed) இருப்பது மிகவும் அவசியம்.
"இப்பயிற்சிகளைச் செய்வதால் எனக்கும் என் குடும்பத்திற்கும் என்ன பயன் கிடைக்கும்?"
இப்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், உங்கள் மனம் தேவையற்ற எண்ணங்களிலிருந்து விடுபட்டுப் படிப்படியாக அமைதி பெறும். மனஅழுத்தம் நீங்கும்; எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் மாறி குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். வீண் குழப்பங்கள் குறைந்து சிந்தனை தெளிவடையும். எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்ளும் மன ஆற்றல் மேம்படும். தீய பழக்கங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை உங்களால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.
இவற்றை நான் சொல்வதைவிட, நீங்களே தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு அதன் மாற்றங்களை நேரில் உணர்ந்து கொள்ளுங்கள். "இவையெல்லாம் எனக்கு ஒத்து வராது" என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிய வழியுண்டு; நீங்கள் ஒரு நல்ல மனிதராக வாழுங்கள் அல்லது வாழ முயற்சி செய்யுங்கள். அப்படி வாழ்ந்தாலே போதும், நீங்களும் ஒரு சிறந்த ஆன்மிகவாதிதான்!
இறுதியாக, நீங்கள் தினமும் சொல்ல வேண்டிய ஒரு மங்களச் சொல்: "வாழ்க வளமுடன்". இந்த வார்த்தையை அடிக்கடி உச்சரியுங்கள். இது மிகவும் சக்தி வாய்ந்த சொல்; எதிர்மறை அதிர்வுகளை நீக்கும் ஆற்றல் கொண்டது. இச்சொல்லைத் தினமும் உச்சரிப்பது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நல்ல அதிர்வலைகளை உருவாக்கும். அலைபேசியில் மற்றவர்களிடம் பேசும்போதும், மற்றவர்களை நேரில் சந்திக்கும்போதும் "வணக்கம், வாழ்க வளமுடன்" என்று சொல்லத் தொடங்குங்கள். குறிப்பாக உங்கள் முகநூல் (Facebook), கீச்சகம் (X/Twitter), புலனம் (WhatsApp), மின்னஞ்சல் போன்றவற்றில் இந்த மங்களச் சொல்லை உலாவ விடுங்கள்.
• உங்கள் மாற்றம், உங்கள் குடும்பத்தை மாற்றும்.
• குடும்பத்தின் மாற்றம், உங்கள் உறவினர்களை மாற்றும்.
• உறவினர்களின் மாற்றம், அவர்களின் நண்பர்களை மாற்றும்.
• உங்கள் அனைவரின் மாற்றம், நம் சமுதாயத்தையே மாற்றும்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment