Saturday, 1 August 2020

பெற்றோர்களுக்கு..





உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:


பெற்றோர்களுக்கு......


"குழந்தைப்பேறு இல்லையே எனப் பலர் ஏங்கிக்கொண்டிருக்க, உங்களுக்கு எந்தக் குறையுமின்றி இறைவன் அந்த வரத்தை அளித்திருக்கிறான். 'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளுக்கேற்ப, அவர்களை அன்பாகவும் பண்பாகவும் வளர்த்து, நாட்டின் சிறந்த குடிமகனாக உருவாக்குவது பெற்றோர்களாகிய நமது தலையாய கடமையாகும். எனவே, குழந்தைகளின் வளர்ச்சியில் சிறுவயதிலிருந்தே முழு அக்கறை செலுத்துங்கள்.


குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரைப் பின்பற்றியே வளர்கிறார்கள். பெற்றோரின் ஒவ்வொரு செயலையும் கூர்மையாகக் கவனிக்கும் அவர்கள், அதன்படியே செயல்பட முயல்கின்றனர். ஆதலால், நாம் நமது செயல்பாடுகளில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நாம் எப்போதும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ வேண்டும்." 


"பொருளாதாரத்தைக் காரணம்காட்டி குழந்தைகள் மீதான உங்கள் ஈடுபாட்டைக் குறைத்துக்கொள்ளாதீர்கள். இன்றைய பொருளாதாரச் சூழலில் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதனால், குழந்தைகளைக் காப்பகத்திலோ அல்லது மற்றவர்களிடமோ ஒப்படைக்க நேரிடுகிறது. இது காலத்தின் கட்டாயம் என்பதால் குறை சொல்ல முடியாது. ஆனால், குழந்தைகளை அங்கே விடும்போது, அந்த இடத்தின் தரம் மற்றும் அவர்கள் குழந்தைகளைப் பராமரிக்கும் விதம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தைகளின் கல்வியில் முழு அக்கறை செலுத்துங்கள்; அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். முடிந்தவரை உங்கள் குழந்தைகளைத் தமிழ் பள்ளிக்கு அனுப்புங்கள். ஒரு குழந்தை தன் தாய்மொழியில் புலமை பெற்றுவிட்டால், மற்ற மொழிகளை மிக எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். வீட்டில் குழந்தைகளிடம் தமிழிலேயே உரையாடுங்கள். 'மம்மி, டாடி' என்று பழக்காமல் 'அம்மா, அப்பா' என்று அழைக்கக் கற்றுக்கொடுங்கள்.


சற்று கவனித்துப் பார்த்தால்

பிற இனத்தவர் தங்களுக்குள் உரையாடும்போது தாய்மொழியையே பயன்படுத்துகின்றனர். ஆனால், நம்மில் சிலரோ ஆங்கிலத்தில்தான் உரையாடுகிறார்கள். ஏன் இந்த நிலை? நம் மொழியை நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? தாய்மொழியில் பேசத் தயங்காதீர்கள். ஆங்கிலம் கற்க வேண்டாம் என்று சொல்லவில்லை, சூழ்நிலைக்கேற்ப அந்த மொழியைப் பயன்படுத்துங்கள்; மற்ற நேரங்களில் தமிழையே சுவாசியுங்கள்!"


"அடுத்து, குழந்தைகளைக் கண்டிக்கும்போது ஒருபோதும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்; அன்போடு கண்டியுங்கள். மற்றவர்கள் முன்னிலையில் அவர்களைத் திட்டுவதைத் தவிர்க்கவும். பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகள் முன்னால் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். அதனைத் தொடர்ந்து கவனிக்கும் குழந்தைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். எனவே, குழந்தைகளின் மனநலன் கருதி உங்கள் நடத்தையில் கவனமாக இருப்பது நன்று. 


மாதமொரு முறையாவது குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று, அவர்களின் வகுப்பு ஆசிரியரைச் சந்தித்து உரையாடுங்கள். இது உங்கள் குழந்தைக்கு மட்டுமின்றி, அந்த ஆசிரியருக்கும் மிகுந்த உற்சாகத்தைத் தரும். உங்களின் இந்த ஈடுபாடு, ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவை மேலும் மேம்படுத்தும். குழந்தைகள் ஏதேனும் சொல்ல வரும்போதோ அல்லது கேள்வி கேட்கும்போதோ, அதனை ஆர்வமுடன் கேட்டுப் பொறுமையாகப் பதில் சொல்லுங்கள். ஒருபோதும் சலிப்புடன் முகம் சுளிக்காதீர்கள். 


மற்ற குழந்தைகளோடு உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தையிடமும் தனித்துவமான திறமைகள் உண்டு; அதனை அடையாளம் கண்டு வெளிக்கொணர முயற்சி செய்யுங்கள். 'நீ திறமையானவன்', 'உன்னால் முடியும்', 'நிச்சயம் வெற்றி பெறுவாய்', 'வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவாய்' என்று கூறி அவர்களை அடிக்கடி உற்சாகப்படுத்துங்கள். நம்முடைய நேர்மறையான சொற்களும் செயல்களுமே அவர்களுக்குப் பெரிய உத்வேகத்தை அளிக்கும். முக்கியமாக, உங்கள் ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல், அவர்கள் விரும்பும் துறையிலேயே அவர்களைப் படிக்க வையுங்கள்." 


"குழந்தைகளை அழைக்கும்போது அவர்களின் பெயருக்குப் பின்னால் 'ஐயா' அல்லது 'அம்மா' என்ற மரியாதைக்குரிய சொற்களைச் சேர்த்து அழையுங்கள். பிள்ளைகளுக்குச் சமயக் கல்வியை இளம் வயதிலிருந்தே போதிக்க வேண்டும்; அதனை ஒரு கடமையாகவே மேற்கொள்ள வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களைச் சமயச் சொற்பொழிவுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள்.


ஒரு பண்பட்ட இளம் தலைமுறையை உருவாக்க இதுவே சரியான வழி. பிள்ளைகளுக்குப் படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதற்கு இணையாகச் சமயக் கல்வியும் அவசியமானது. ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை ஒரு மாணவனுக்குச் சரியான சமய அறிவு புகட்டப்பட்டால், அவர்கள் இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும்போது வழிதவறிப் போவதற்கான வாய்ப்புகள் குறையும். ஏதேனும் தவறான செயல்களில் ஈடுபடும் முன், அவர்களின் அறிவு அவர்களைச் சிந்திக்க வைக்கும்.


குழந்தைகளின் ஜாதகப்படி எந்தத் தெய்வத்தை வணங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதற்கேற்ப அவர்களை வழிநடத்துங்கள். நம்முடைய இஷ்ட தெய்வத்தைத்தான் அவர்களும் வணங்க வேண்டும் என்று ஒருபோதும் வற்புறுத்தாதீர்கள். அவர்களுக்குப் பிடித்த தெய்வத்தை அவர்கள் வணங்கும்போது தன்னம்பிக்கை வளரும். அந்தத் தெய்வங்களுக்குரிய மூல மந்திரங்களைக் கற்றுக் கொடுத்து, அவற்றின் பொருளையும் விளக்கிச் சொல்லுங்கள்.


வாரம் ஒருமுறையாவது குழந்தைகளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். அப்போது நமது பாரம்பரிய உடைகளை அணியப் பழக்குங்கள். கோவிலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டு நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிக்காதீர்கள். அவர்களுடனே அமர்ந்து பூஜையில் கலந்து கொள்ளுங்கள்; முடிந்தவரை அமைதி காக்கப் பழக்குங்கள். கோவிலுக்குள் சென்றவுடன் அலைபேசியை அணைத்துவிடுங்கள்; மிக முக்கியமெனில் வெளியே சென்று பேசுங்கள். எந்நேரமும் குழந்தைகள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்."


"தினமும் காலையிலிருந்து இரவு வரை எதையாவது பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்; ஆலயத்திலாவது சிறிது நேரம் அமைதியைக் கடைப்பிடிப்பது மிகவும் நன்று. அங்கே அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களின் சத்தம் மட்டுமே நம் செவிகளில் விழ வேண்டும். மந்திரங்கள் ஆலயம் முழுவதும் எதிரொலித்து, அதன் மூலம் வெளிப்படும் தெய்வீக அதிர்வுகளை முழுமையாகப் பெற்று நாம் நன்மையடைய வேண்டும்.


அடுத்து, வளரிளம் பருவத்தில் (Teenage) இருக்கும் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் ஒரு சிறந்த நண்பனாகப் பழக வேண்டும். ஏனெனில், இக்காலகட்டத்தில் குழந்தைகள் பல புதிய சவால்களையும் மனப்போராட்டங்களையும் எதிர்கொள்கின்றனர். அவற்றை முறியடிக்க நாம் அவர்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். நம்முடைய சுமைகளையும் கவலைகளையும் அவர்கள் மீது திணிக்காமல், அவர்களின் விருப்பு வெறுப்புகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப நல்வழிப்படுத்துங்கள்.


பெற்றோர்களாகிய நாம் நம் கடமையிலிருந்து தவறும்போது, பிள்ளைகள் மெதுவாக நம்மிடமிருந்து விலகி நண்பர்களின் உதவியை நாடத் தொடங்குவார்கள். அதுமட்டுமின்றி, பல விஷயங்களை நம்மிடம் மறைக்கத் தொடங்குவார்கள். அவர்கள் தேடும் நட்பு நல்லதாக அமைந்தால் மகிழ்ச்சி; ஆனால், அது தவறான நட்பாக அமைந்துவிட்டால் அவர்களின் எதிர்காலமே பாழாகிவிடும். ஆகையினால், பிள்ளைகளுடனான உறவில் பெற்றோர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


வாழ்க வளமுடன்!"






No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...