Sunday, 16 August 2020

இளைஞர்களுக்கும் & பெண்களுக்கும்

 



ஓம் பூரணனே பதினாறுதிங்கள் சேறும் பொருந்தியே யருக்கன் பதினெட்டுஞ் சேரும், காரணனே கருமுகில் பொன்மேனிசேருங் கருணைபெறு மஷ்டாட்சரங் கலந்து வாழும், வாரணனே லட்சுமியோடெட்டுஞ்சேரும், மதிமுகம்போல் நின்றிலங்கு மாயாநேயா ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே.

 

இளைஞர்களுக்கும்  &  பெண்களுக்கும்

.

"குரு அல்லது ஆன்மிக வழிகாட்டி உள்ளவர்கள், அவர்கள் காட்டும் வழியில் செல்லுங்கள். தியானம் தெரிந்தவர்கள் தியானம் செய்யுங்கள். குரு இல்லாதவர்கள், விருப்பமிருந்தால் அடியேன் சொல்லும் பயிற்சிகளை முயற்சி செய்து பாருங்கள்.


அதற்குமுன் ஒரு அன்பான வேண்டுகோள்: எந்தச் சூழ்நிலையிலும் மற்றவர்களுடைய வழிபாட்டு முறையைக் கேலியோ, கிண்டலோ செய்யாதீர்கள். அது அவரவர் நம்பிக்கை. இறை வழிபாடு என்பது அனைவருக்கும் பொதுவானது. அமெரிக்காவிலிருந்து பார்த்தாலும், ஆசியாவிலிருந்து பார்த்தாலும் சூரியனும் சந்திரனும் ஒன்றே; பார்க்கும் இடம்தான் வேறு. காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகியவை எப்படி அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானவையோ, அதுபோலவே இறைவனும் அனைவருக்கும் பொதுவானவன்.


உலகில் உள்ள மதங்கள் எல்லாம் மனிதர்களை நல்வழிப்படுத்தவே உருவாயின. எந்த மதமும் ஒரு மனிதனைத் தவறான பாதையில் செல்லச் சொல்லவில்லை. எல்லா மதங்களும் மனிதனை மனிதனாக வாழச் சொல்கின்றன. ஆகையினால், எந்தச் சூழ்நிலையிலும் பிற மதத்தையோ அல்லது அவர்களின் வழிபாட்டையோ குறை சொல்லாதீர்கள். வழிகள் பலவானாலும் போய்சேருமிடம் ஒன்றே என்பதை நினைவில் கொள்க.


எந்த ஒரு விஷயத்தையும் அனுபவரீதியாக உணராதவரை, நீங்கள் அதனை நம்ப வேண்டிய அவசியம் இல்லை."


"இளைஞர்களாகிய நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்; ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குத் தூண்களாகத் திகழ்பவர்கள். நாடும் வீடும் உங்கள் கைகளில்தான் உள்ளன. நீங்கள் மனது வைத்தால் முடியாதது எதுவுமில்லை. இளைய தலைமுறையினரான உங்களுக்குக் கல்வி ஒன்றுதான் வாழ்க்கையில் உயர்வைக் கொடுக்கும். 


எனவே, சிறுவயது முதலே கல்வியில் அக்கறை செலுத்துங்கள். கல்வியைப் பாதியில் நிறுத்திவிடக் கூடாது; ஒருவேளை அவ்வாறு விடுபட்டிருந்தால், அதனைத் தொடர முயற்சி செய்யுங்கள். குறிப்பாகப் பெண்கள், உங்கள் கல்வித் தகுதியைக் காலத்திற்கேற்ப உயர்த்திக்கொள்ள வேண்டும்.


தினமும் உலகில் நடக்கும் நிகழ்வுகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்ளுங்கள். இன்று உலகமே உங்கள் விரல் நுனியில் வந்துவிட்டது. அதனைச் சரியான முறையில் பயன்படுத்தி முன்னேறுங்கள். உங்களுக்குப் பிடித்த துறையில் பயின்று சாதித்துக் காட்டுங்கள். உங்கள் பெற்றோரின் கனவுகளை நனவாக்குங்கள்!"


"நமது இந்து மதம் என்பது வெறும் மூடநம்பிக்கைகளின் தொகுப்பல்ல. அந்த நம்பிக்கைகளுக்கான சரியான விளக்கங்கள் மக்களிடம் முறையாகச் சென்றடையாததே இன்றுவரை நீடிக்கும் பல குழப்பங்களுக்குக் காரணமாகும். தலைமுடி முதல் காலில் அணியும் மெட்டி வரை, நம் பழக்கவழக்கங்கள் அனைத்திலும் அறிவியல் ஒளிந்துள்ளது. நம் முன்னோர்கள் எதனையும் காரணமின்றிச் சொல்லி வைக்கவில்லை..


சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்; அன்றைய சூழலில் பாமர மக்களிடம் அறிவியலைப் பற்றி நேரடியாகப் பேசினால் அவர்கள் அதனைப் புரிந்து கொள்வார்களா? அது தேவையற்ற குழப்பங்களையே உருவாக்கியிருக்கும். இதைக் கருத்தில் கொண்டே, அறிவியலை மதச் சடங்குகளுக்குள் புகுத்தி வாழ்வியலாக மாற்றினார்கள்.


'இன்றைய நவீன காலத்தில் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா?' என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். காலத்திற்கு ஒவ்வாத சில விஷயங்களை விடுத்து, தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. உதாரணத்திற்கு, அன்று அகல் விளக்குகளைப் பயன்படுத்திய நாம், இன்று மின் விளக்குகளைப் பயன்படுத்துகிறோம் அல்லவா?


அதேபோல், 'இரவில் நகம் வெட்டக் கூடாது; மீறினால் குடும்பத்திற்கு ஆகாது' எனப் பெரியவர்கள் பயமுறுத்துவதுண்டு. இதன் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்றால், மின்சாரம் இல்லாத அக்காலத்தில் இரவில் நகம் வெட்டினால், அது தரையில் சிதறிக் கிடக்கும். தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இருந்ததால், அந்த நகங்கள் உணவில் கலக்கவோ அல்லது விளையாடும் குழந்தைகளின் உடலில் ஒட்டிக்கொண்டு வயிற்றுக்குள் செல்லவோ வாய்ப்பிருந்தது. இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்கவே 'பயம்' என்ற உணர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் கட்டுப்பாடுகளை விதித்தனர்."


"இன்னும் சில உதாரணங்களைக் கூறுகிறேன். முற்காலத்தில் பெண்கள் இடுகாட்டிற்குச் செல்ல அனுமதியில்லை. இதற்குக் காரணம், அன்று இடுகாடுகள் பெரும்பாலும் ஊருக்கு வெளியே புதர்களும் காடுகளும் மண்டிய பகுதிகளில் அமைந்திருந்தன. மின்விளக்கு வசதிகள் இல்லாத அக்காலத்தில், சடங்குகளை முடித்துத் திரும்ப அந்திப் பொழுதாகிவிடும். பாம்பு, தேள் போன்ற விஷப் பூச்சிகளின் நடமாட்டமும், ஒருவித அச்ச உணர்வும் இருக்கும். பெண்களின் பாதுகாப்பு மற்றும் இயல்பான பயந்த சுபாவத்தைக் கருத்தில் கொண்டே அன்று இடுகாட்டிற்குச் செல்ல வேண்டாம் என்றனர்.


ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. மின்மயானங்கள் வந்துவிட்டன; பழைய இடுகாடுகள் மறைந்துவிட்டன. எனவே, பெண்கள் தாராளமாக மின்மயானங்களுக்குச் செல்லலாம். தன் தந்தைக்கோ தாய்க்கோ இறுதி அஞ்சலி செலுத்த ஒரு மகள் விரும்பினால், அதனை யாரால் தடுக்க முடியும்?


மற்றொரு உதாரணம், அதிகாலையில் கோலம் போடுவது. 'ஏன் மதியமோ அல்லது அந்திப் பொழுதிலோ போடக் கூடாது?' என்ற கேள்வி எழலாம். அதிகாலையில் பூமியில் பிரபஞ்ச ஆற்றல் (Cosmic Energy) அதிகமாகப் பரவியிருக்கும். அந்தத் தூய காற்றைச் சுவாசிக்கும்போது நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் குனிந்து, நிமிர்ந்து, அமர்ந்து கோலம் போடும்போது நமது தசைகள் வலுப்பெறுகின்றன; இது ஒரு சிறந்த யோகா பயிற்சியாகும்.


அன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் உழைப்பு அதிகமாக இருந்ததால், தனியாக உடற்பயிற்சி தேவைப்படவில்லை. ஆனால் இன்று அமர்ந்த இடத்திலேயே வேலை செய்யும் சூழல் பெருகிவிட்டதால், உடல் ஆரோக்கியம் குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே, இன்று உடற்பயிற்சிக்கெனத் தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது."


"அடுத்து, நாம் மாட்டுச் சாணத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இன்று 'சாணம்' என்றாலே இளைய தலைமுறையினர் முகத்தைச் சுளிக்கின்றனர். ஆனால், அறிவியல் ரீதியாகச் சாணம் ஒரு சிறந்த கிருமிநாசினியாகும். அதனை நீரில் கரைத்துத் தரையில் மெழுகும்போது, அது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை ஈர்த்து அழிக்கிறது. அக்காலத்தில் வீடுகள் பெரும்பாலும் மண்தரைகளாக இருந்ததால், எப்போதும் தூசு படிந்திருக்கும்; காற்றடித்தால் சொல்லவே வேண்டியதில்லை. இதனால் ஏற்படும் சளி, இருமல் போன்ற உபாதைகளைத் தடுக்கவே மண்தரையைச் சாணத்தால் மெழுகினார்கள். இதுதவிர, நாம் வாசலில் இடும் அரிசி மாவுக் கோலம் எறும்பு மற்றும் குருவிகளுக்கு உணவாக அமைகிறது.


மற்றொரு உதாரணம் துளசி. நம் முன்னோர்கள் துளசிச் செடியில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பினர். துளசியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும், வீடு மங்களகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், அதற்கெனத் தனி மாடம் அமைத்துப் பெண்களைத் தினமும் சுற்றி வரச் செய்தனர். உண்மையில், எதற்காகச் சுற்றுகிறோம் என்று தெரியாமலேயே பல பெண்கள் அதனைப் பின்பற்றி வந்தனர்.


ஆனால், துளசி என்பது ஒரு மகத்தான மூலிகைச் செடியாகும். இதனை மிக எளிதாகப் பயிர் செய்யலாம். பொதுவாக நம் நாட்டில் வெண் துளசி, கருந்துளசி (கிருஷ்ண துளசி) என இரண்டு வகைகள் காணப்படுகின்றன. துளசிச் சாறு சளியைக் கட்டுப்படுத்த வல்லது. இதன் இலைகளைத் தினமும் உட்கொண்டு வந்தால் குடல் சுத்தமாகும். சிறு காயங்களுக்கு இதன் இலைகளை அரைத்துப் பத்து போடலாம்; பூச்சிக் கடிகளுக்கும் இது சிறந்த நிவாரணம் அளிக்கும். தினமும் ஒரு துளசித் தளிரைச் சாப்பிட்டு வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும்; பெண்களுக்கு ஏற்படும் பேன் தொல்லையையும் இது போக்கும். இவ்வாறு துளசியின் மருத்துவப் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்."


"இப்படித்தான் பல சடங்குகள் அன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன. அவற்றை மூடநம்பிக்கை என்று பரிகாசம் செய்யக் கூடாது; ஏனெனில், அவை அனைத்தும் அறிவியலோடு தொடர்புடையவை. காலத்திற்கேற்ப உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் அதிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். இனி இவற்றை அறிந்து புரிந்துகொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும். எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல், 'ஏன், எதற்கு, எப்படி?' என்று கேள்வி கேட்டுப் பதிலைத் தேடுங்கள்.


அடுத்து, என்னால் இயன்ற சில எளிய பயிற்சிகளை இங்கே குறிப்பிடுகிறேன்; முடிந்தால் செய்து பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் ஒரு அமரும் நிலையில் (யோகாசனம் அல்லது சுகாசனம்) அமர்ந்து இதனைப் பழகலாம். 'ஆசனம்' என்பது நாம் அமரும் நிலையைக் குறிக்கும். உங்களுக்கு வசதியான ஒரு நிலையைத் தேர்வு செய்து தியானம் செய்யுங்கள்; அந்த நிலையை அடிக்கடி மாற்றாமல் இறுதிவரை ஒன்றையே பின்பற்றுங்கள்.


உங்களுக்கு முதுகுவலி அல்லது மூட்டுவலி இருந்தால், சுகாசன நிலையில் (இயல்பாகக் கால்களை மடித்து அமர்தல்) அமர்ந்து தியானம் செய்யுங்கள். உடலை வருத்திக்கொண்டு எதையும் செய்ய வேண்டாம். தியானத்தின் போது முதுகெலும்பும் தலையும் நேராக இருப்பது நல்லது. ஏனெனில், உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் நேர்க்கோட்டில் அமைந்துள்ளன; நாம் நேராக அமரும்போது அவற்றை எளிதாகத் தூண்ட முடியும்."


"இப்பயிற்சியைத் தொடங்கும் முன், உங்கள் குலதெய்வத்தை அல்லது இஷ்ட தெய்வத்தை மனதார வணங்கி ஆரம்பியுங்கள்; முடிக்கும்போதும் அவ்வாறே வணங்கிவிட்டு எழுங்கள். நீங்கள் இப்பயிற்சியில் ஈடுபடும்போது எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் இருக்க, உங்கள் தெய்வமே ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கித் தரும். இனி இப்பயிற்சிக்கு உங்கள் தெய்வமே குருவாக இருந்து உங்களை வழிநடத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


முதலில் 5 நிமிடங்கள் மட்டும் பயிற்சியைச் செய்யுங்கள்; பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

பயிற்சி முறைகள்:

முறை 1: உங்கள் உடலையும் மனதையும் தளர்வாக (Relax) வைத்துக்கொள்ளுங்கள். பார்ப்பது, யோசிப்பது, பேசுவது, கேட்பது போன்ற புற இயக்கங்களை நிறுத்திவிட்டு, மெதுவாகக் கண்களை மூடுங்கள். அந்த அமைதியான நிலையிலேயே இருக்கப் பழகுங்கள்.

முறை 2: உடலையும் மனதையும் தளர்வாக்கி, புற இயக்கங்களை நிறுத்தி மெதுவாகக் கண்களை மூடுங்கள். மூடிய கண்களுடன் மனதிற்குள் உங்களுக்குத் தெரிந்த மந்திரத்தையோ அல்லது ஸ்லோகத்தையோ தொடர்ந்து உச்சரித்து வாருங்கள்.

முறை 3: உடலையும் மனதையும் தளர்வாக்கி, புற இயக்கங்களை நிறுத்தி மெதுவாகக் கண்களை மூடுங்கள். உங்கள் புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) குலதெய்வத்தை அல்லது இஷ்ட தெய்வத்தை நிலைநிறுத்தி, அந்தத் தெய்வத்தின் திருநாமத்தை இடைவிடாது சொல்லிக்கொண்டே இருங்கள்.


இவை தவிர மற்றொரு முறையும் உள்ளது: முதலில் உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் மூல மந்திரத்தைத் தேடி அறிந்துகொள்ளுங்கள். இந்த முறையைப் பூஜையறையில் அமர்ந்து தொடங்குவது மிகவும் சிறந்தது."


"மந்திரங்களை மூன்று நிலைகளில் உச்சரிக்கலாம்: சற்றுச் சத்தமாகச் சொல்வது, உதட்டளவில் முணுமுணுப்பது அல்லது மனதிற்குள்ளேயே சொல்வது. இம்மூன்றுமே சரியான முறைகள்தான்; உங்களுக்கு விருப்பமான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும், மந்திரங்களை மனதிற்குள் உச்சரிக்கும்போது அவற்றின் ஆற்றல் அதிகரிக்கும்; மிக விரைவில் நீங்கள் அந்த மந்திரத்தோடு ஒன்றிவிட முடியும். மந்திரங்களில் உயர்வு தாழ்வு ஏதுமில்லை, அனைத்துமே சக்திவாய்ந்தவைதான். நாம் அவற்றை உச்சரிக்கும் விதத்தில்தான் அவற்றின் பலன் அடங்கியுள்ளது.


உதாரணத்திற்கு, உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் முருகன் எனில், அவருக்குரிய மூலமந்திரமான 'ஓம் சரவணபவ' என்பதை முதலில் 11 முறை என ஆரம்பித்து, பிறகு படிப்படியாக எண்ணிக்கையை அதிகரியுங்கள். தினமும் குறைந்தது 108 முறை சொல்வது சிறந்தது; அதற்கு மேல் உச்சரிப்பது உங்கள் விருப்பம். இவ்வாறு உங்கள் தெய்வத்தின் மூலமந்திரத்தை முழு மனவலிமையுடன் தொடர்ந்து உச்சரிக்கும்போது, அதன் அதிர்வுகள் அந்தத் தெய்வத்தைச் சென்றடையும்; தெய்வத்தின் அருளும் உங்களை நாடி வரும்.


ஆரம்பக் காலத்தில் இம்மந்திரங்களைத் துளசி மாலை, உருத்திராட்ச மாலை அல்லது பூக்களைக் கொண்டு எண்ணித் துதிக்கலாம். பிற்காலத்தில் மந்திரங்கள் உங்கள் உயிருடன் ஒன்றிவிட்ட பிறகு, இத்தகைய கருவிகள் தேவைப்படாது. 'தினமும் செய்ய முடியவில்லையே' என வருந்துபவர்கள், உங்களால் இயன்ற நாட்களில் மட்டும் தவறாமல் செய்யுங்கள்.


அடுத்து, சித்தர்கள் மீது ஈடுபாடு உள்ளவர்கள் 18 சித்தர்களில் ஒருவரை உங்கள் குருவாக ஏற்றுக்கொள்ளலாம். இந்த வரிசையில் பட்டினத்தார் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். முடிந்தால், அந்தச் சித்தர்களின் ஜீவசமாதிக்கு ஒரு முறையாவது நேரில் சென்று வணங்கி வருவது மிகுந்த பலன் தரும்."


"இப்பயிற்சிகளை உங்கள் அனைவராலும் செய்ய முடியும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு முறைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. நாட்கள் செல்லச் செல்ல உங்களுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்; அந்த அனுபவங்களை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.


ஆன்மீகத்தில் சாதாரண நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால், சில கட்டுப்பாடுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதில் முதன்மையானது சைவ உணவை உட்கொள்வது. 'அசைவம் சாப்பிட்டால் ஆன்மீகப் பயிற்சி செய்ய முடியாதா?' என்ற கேள்வி எழலாம். அசைவ உணவை உண்ட பின் உடலில் பல ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன; இதயத் துடிப்பும் இரத்த ஓட்டமும் வேகமடைகின்றன. உடல் வெப்பம் அதிகரிப்பதோடு, உண்ட உணவு செரிமானம் ஆகவும் நீண்ட நேரமாகும். உடல் இத்தகைய நிலையில் இருக்கும்போது, எப்படி முழு மனதுடன் தியானம் செய்யவோ, மந்திரங்களை அமைதியாக உச்சரிக்கவோ முடியும்?


அதனால்தான் சைவ உணவைப் பரிந்துரைக்கிறேன். அப்போதுதான் உங்களுக்குள் அமைதியும் சாந்தமும் நிலவும்; தியானத்திற்குத் தேவையான மனப்பக்குவமும் கிடைக்கும். 'இல்லை, என்னால் அசைவ உணவோடும் தியானம் செய்ய முடியும்' என்று கருதுபவர்கள், தாராளமாக முயற்சி செய்து பாருங்கள்.


அடுத்ததாக, இப்பயிற்சிகளைத் தொடங்கும் முன் காலைக் கடன்களை முடித்துவிட்டு அமருங்கள். பசியோடு இருக்கும்போதோ, கோபமாக இருக்கும்போதோ, நோய்வாய்ப்பட்டிருக்கும் போதோ அல்லது உடல் உபாதைகளை அடக்கிக்கொண்டோ தியானம் செய்யாதீர்கள். தியானத்தில் ஈடுபடும்போது மனமும் உடலும் தூய்மையாகவும் தளர்வாகவும் இருப்பது அவசியம்.


இந்தத் தியானப் பயிற்சிகளைச் செய்ய நேரமே இல்லை என்பவர்கள், காலையில் எழுந்ததும் 'ஓம் நமசிவாய', 'முருகா', 'ராம ராம', 'ஓம் சக்தி' அல்லது 'ஓம் கணபதியே' என உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு நாமத்தைச் சொல்லுங்கள். மாலையில் பொழுது சாய்ந்ததும் மீண்டும் அதனையே சொல்லிவிட்டு உறங்கச் செல்லுங்கள்."


"இறுதியாக, நீங்கள் தினமும் சொல்ல வேண்டிய ஒரு மங்கலச் சொல் 'வாழ்க வளமுடன்'. இச்சொல்லை அடிக்கடி உச்சரியுங்கள்; இது மிகவும் சக்திவாய்ந்த நேர்மறை அதிர்வுகளைக் கொண்டது. எதிர்மறையான எண்ணங்களை நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இச்சொல்லைத் தினமும் உச்சரிப்பதன் மூலம் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நல்ல அதிர்வலைகள் உருவாகும்.


மற்றவர்களிடம் அலைபேசியில் பேசத் தொடங்கும்போது 'வணக்கம், வாழ்க வளமுடன்' என்று கூறுங்கள். யாரைச் சந்தித்தாலும் இச்சொல்லைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக உங்கள் முகநூல் (Facebook), எக்ஸ் தளம் (X - Twitter), புலனம் (WhatsApp), மின்னஞ்சல் (Email) போன்ற சமூக ஊடகங்களிலும் இந்த மங்கல வார்த்தையைப் பகிருங்கள்.


இப்பயிற்சிகளால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்?


இப்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், உங்கள் மனம் தேவையற்ற எண்ணங்களிலிருந்து விடுபட்டு அமைதி பெறும். மன அழுத்தத்திலிருந்து (Stress) விடுதலை கிடைக்கும். எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் நிலை, இயலாமை மற்றும் தனிமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுக்கும் திறன் வளரும். 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை பிறக்கும். ஏதேனும் தீய பழக்கங்கள் இருந்தால், அவற்றை உங்களால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். நான் சொல்வதை விட, நீங்களே இப்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து உங்களில் ஏற்படும் மாற்றங்களை நேரடியாக உணர்ந்து கொள்ளுங்கள்.


உங்களின் மாற்றம், உங்கள் குடும்பத்தை மாற்றும்.

உங்கள் குடும்பத்தின் மாற்றம், உங்கள் உறவினர்களை மாற்றும்.

உறவினர்களின் மாற்றம், அவர்களின் நண்பர்களை மாற்றும்.

உங்கள் அனைவருடைய மாற்றம், நம் சமுதாயத்தையே மாற்றும். 

வாழ்க வளமுடன்!"








No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...