சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன்
தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே
உங்கள் சிந்தனைக்கு...
ஆன்மீகத்தில் ஈடுபட விரும்புவோர் முதலில் கட்டுப்படுத்த வேண்டியது தங்களின் நாவை. ஒரு மனிதனின் வாழ்விற்கும் தாழ்விற்கும் அவனது சொல்லே காரணமாகிறது. எனவே, தேவையுள்ள இடங்களில் மட்டும் பேசுங்கள்; தேவையற்ற பேச்சுகளைத் தவிருங்கள். உங்களால் முடிந்தவரை மௌனத்தைக் கடைபிடிக்கப் பழகுங்கள்.
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் உங்கள் இல்லங்களில் பால தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம், கந்தர் குரு கவசம், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம், பஞ்சாமிருத வண்ணம் அல்லது உங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களின் பாடல்களை ஒலிக்கச் செய்யுங்கள். இது உங்கள் வீட்டினுள் நேர்மறையான தெய்வீக அதிர்வுகளை உருவாக்கும்.
உலகில் எத்தனையோ கோடி மக்கள் உண்ண உணவின்றி, பருக நீரின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தட்டுப்பாடின்றி நல்ல உணவையும் தூய்மையான நீரையும் நமக்கு அளித்த இறைவனுக்குத் தினமும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே, தயவுசெய்து உணவை வீணாக்காதீர்கள்.
வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், வாகனங்களை ஓட்டும்போதும், ஒரு வேலையைத் தொடங்கும் முன்னரும் உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தைச் சொல்லுங்கள். அந்த நாமம் ஒரு கவசமாக நின்று உங்களைக் காக்கும். இதனை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள். குறிப்பாக, காலையில் கண் விழிக்கும்போதும், இரவில் உறங்கும் முன்பும் இறைநாமத்தைச் சொல்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது அடியேனின் அனுபவத்தில் கண்ட உண்மை.
வாழ்வியல் ஆலோசனைகள்
முடிந்தவரை கடன் வாங்குவதைத் தவிர்க்கப் பாருங்கள். நான் குறிப்பிடுவது வீடு அல்லது வாகனத்திற்காக வங்கிகளில் பெறப்படும் கடனை அல்ல; தனிநபர்களிடம் வாங்கும் கடனைப் பற்றியது. அவ்வாறு வாங்கியிருந்தால், உங்கள் ஆயுட்காலத்திற்குள்ளேயே அதைத் திருப்பிச் செலுத்திவிடுங்கள். உங்களால் இயலாத பட்சத்தில், உங்கள் பிள்ளைகளிடமாவது பொறுப்பை ஒப்படைத்து அந்தக் கடனை அடைக்கச் செய்யுங்கள். யாரிடமும் 'ஜென்மாந்திர கடன்' (பிறவித் தொடரும் கடன்) வைத்துக்கொள்ள வேண்டாம். கடன் கொடுத்தவர் உயிருடன் இல்லையென்றால், அவருடைய வாரிசுகளிடம் அதனை ஒப்படைத்து விடுங்கள். ஆன்மீகப் பாதையில் பயணிப்பவர்கள் இதனை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இல்லாததை எண்ணி ஏங்குவதை விட, இருப்பதைக்கொண்டு வாழப் பழகிக்கொள்ளுங்கள். 'சிக்கனம் சிறப்பைத் தரும்' என்ற பொன்மொழிக்கேற்ப, வாழ்வைச் சிறப்பாக அமைத்துக்கொள்ளுங்கள். நிம்மதியும் சந்தோஷமும் வெளியே எங்கும் இல்லை; அது உங்கள் மனதிற்குள்ளேயே இருக்கிறது. அதனை வீட்டிற்குள் கொண்டு வருவது உங்கள் பொறுப்பாகும்.
உங்கள் அண்டை வீட்டாரிடம் எப்போதும் சுமுகமான உறவைப் பேணுங்கள். ஆபத்துக் காலங்களில் நமக்காக முதலில் ஓடி வருபவர்கள் அவர்களே என்பதால், அண்டை உறவு நமக்கு ஒரு மிகப்பெரிய பலமாகும்.
நண்பர்கள் - உங்கள் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு இவர்களின் பங்களிப்பும் ஒரு முக்கியக் காரணம். அதனால்தான் நம் முன்னோர்கள், "நண்பனைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இரு" என்று கூறினார்கள். எனவே, உங்கள் அருகிலிருப்பவர்கள் நல்ல நண்பர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
செல்லும் கோவில்களிலெல்லாம் வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் வைக்காதீர்கள். நேர்த்திக்கடன் வைப்பது தவறல்ல; ஆனால், அதனைச் செய்ய முடியாமல் போனால் அல்லது மறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? எனவே, ஏதேனும் தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் பாக்கி இருந்தால், அதனை மறக்காமல் உடனடியாகச் செய்து முடித்துவிடுங்கள்
No comments:
Post a Comment