ஆனந்தமாய்,
என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான்
அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான்
அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம்
தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
உங்கள் சிந்தனைக்கு (இரண்டாம் பகுதி)
பிறரைப் பற்றித் தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள்; அவர்களைப் பற்றிப் பேசும் சூழல் ஏற்பட்டால், நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்கள். உங்களின் நேர்மறையான எண்ண அலைகள் அவர்களைச் சென்றடைந்து, அவர்களுக்கு நன்மையை விளைவிக்கும். ஒருவேளை, யாரைப் பற்றியாவது தவறான எண்ணங்கள் உங்கள் மனதில் எழுந்தால், உடனே உங்கள் குலதெய்வத்தையோ, இஷ்ட தெய்வத்தையோ அல்லது குருவையோ தியானியுங்கள்.
உங்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் இன்சொற்களாகவே இருக்கட்டும்; தீய சொற்களை அறவே தவிர்க்கவும். யாரையும் கடுஞ்சொற்களால் புண்படுத்தாதீர்கள். உங்களைப் பற்றி எவரேனும் குறை கூறினால் கோபம் கொள்ள வேண்டாம்; அது அவரது இயல்பு என்று கடந்து செல்லுங்கள். அவரிடமிருந்து அமைதியாக ஒதுங்கிக் கொள்வது, தேவையற்ற சிக்கல்கள் உருவாவதைத் தடுக்கும். காலப்போக்கில் அவரே தன் தவறை உணர்ந்து உங்களைத் தேடி வருவார். இன்றையச் சூழலில் இதைக் கடைப்பிடிப்பது சற்றே கடினம் என்றாலும், முயன்று பாருங்கள்.
மனிதனுக்கு ஆசை இருக்க வேண்டும்; ஆசைகளே இல்லாமல் நம்மால் வாழ முடியாது. ஆசைப்படுவது தவறல்ல, ஆசையே இல்லை என்றால் நாம் ஞானியாகிவிடுவோம். ஆனால், நாம் கொள்ளும் ஆசைகள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.
உங்களால் முடிந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்; இயலவில்லை என்றால் அமைதியாக இருங்கள். ஆனால், உதவி செய்பவர்களை ஒருபோதும் தடுத்த நிறுத்தாதீர்கள்.
எந்தச் சூழலிலும் தெய்வ நிந்தனை செய்யலாகாது. இவ்வுலகில் கஷ்டங்கள் இல்லாத மனிதர் யார்? ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது. "பக்கத்து வீட்டுக்காரர் நன்றாக இருக்கிறார், எதிர் வீட்டுக்காரர் வசதியாக இருக்கிறார்; எனக்கு மட்டும் ஏன் எதுவும் நடக்கவில்லை?" என்று புலம்பிக் கொண்டிருக்காதீர்கள். நமக்கு வரும் சோதனைகளும் கஷ்டங்களும் நம் ஊழ்வினையாகக் கூட இருக்கலாம். எனவே, "இதுவும் கடந்து போகும்" என்ற நம்பிக்கையுடன் இருங்கள். கடவுள் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என உறுதியாக நம்புங்கள்.
தினமும் பிரார்த்தனை செய்யும்போது, "இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க!" என்று வேண்டுங்கள். துன்பம் வரும்போது மட்டும் இறைவனைக் கூவி அழைக்காமல், இன்பம் நிலவும் காலத்திலும் அவரை நன்றியுடன் நினையுங்கள்.
என் குழந்தை என்னை "அப்பா" என்று முதன்முதலில் அழைத்தபோதுதான், எனக்கு என் தந்தையின் அருமை புரிந்தது. பிரசவ வலியால் துடித்தபோதுதான், என் மனைவிக்கு அவளுடைய தாயின் உயர்வு தெரிந்தது. ஆகவே, உங்கள் பெற்றோர்கள் உயிரோடு வாழும் காலத்திலேயே அவர்களை முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.
எந்தவொரு விஷயத்தையும் கேட்டவுடனேயே நம்பிவிடாதீர்கள்; அதன் நம்பகத்தன்மையை ஆராயுங்கள்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"
என்னும் வள்ளுவரின் வாக்குப்படி, எதனையும் தீர விசாரித்து மெய்ப்பொருளை உணர்ந்து செயல்படுங்கள்.
"நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்து செல்லும்போது, கீழே இருப்பவர்களை மறக்காதீர்கள்; உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்குச் செய்யுங்கள்.
அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி வாழாதீர்கள். உங்களை நம்புங்கள், உங்கள் உழைப்பை நம்புங்கள். அதிர்ஷ்டம் என்பது அதன் இஷ்டம்; அது வரும்போது தானாக வரும்.
எப்படியும் வாழலாம் என்று நினைக்காமல், ஒரு நெறியோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். 'எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை' என்ற கொள்கையைக் கடைப்பிடியுங்கள்.
எல்லாமே விதியின்படி (கர்மா) நடக்கும் என்றால், பிறகு ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்? தெய்வத்தை வணங்க வேண்டும்? 'நடப்பது நடக்கட்டும்' என்று பேசாமல் இருந்துவிடலாமே என்ற கேள்வி எழலாம். நீங்கள் தெய்வத்தை வணங்கும்போது, அந்த கர்மாவைத் தாங்கும் மனவலிமை உங்களுக்குக் கிடைக்கும்; துன்பத்திலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையை அது உண்டாக்கும். மேலும், பாதிப்பின் வேகம் சற்று குறையுமே தவிர, கர்மாவின் தாக்கத்திலிருந்து முழுமையாகத் தப்ப முடியாது; அதனை அனுபவித்துதான் தீர வேண்டும்.
எந்த ஒரு வழிபாட்டையும் ஏன் செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம், அதனால் என்ன பயன் என்பதை அறிந்து செய்யுங்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் அல்லது செய்கிறார்கள் என்பதற்காக மட்டும் எதையும் செய்யாதீர்கள்."
"எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் குலதெய்வ வழிபாட்டை விட்டுவிடாதீர்கள். உங்கள் முன்னோர்கள் எப்படி வழிபட்டார்களோ, அதே முறையில் வணங்கி வாருங்கள். உங்கள் வாழ்வு நிச்சயமாக வளம் பெறும்; இதில் சந்தேகம் வேண்டாம்.
'உணவே மருந்து, மருந்தே உணவு'. பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள்; உணவு இருக்கிறது என்பதற்காக எப்போதும் அசைபோட்டுக் கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு 50 வயது கடந்துவிட்டால், உணவு உண்ணும் முறையில் தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளுங்கள்.
இறுதியாகஅடியேன் சொல்ல விரும்புவது என்னவென்றால், வாழ்க்கையில் 'இதுவே போதும்' என்று மனநிறைவு காண்பவர்கள் இறைவனை நாடுங்கள். 'இன்னும் வேண்டும்' என்று நினைப்பவர்கள் கடினமாக உழையுங்கள்; உழைப்போடு வழிபாட்டையும் இணைத்துக் கொள்ளுங்கள், வாழ்வில் சிறப்பாக முன்னேறுவீர்கள்.
நீங்கள் படிப்படியாக உருவ வழிபாட்டிலிருந்து அருவ வழிபாட்டிற்கு (ஞான நிலை) உயர வேண்டும். அந்த நிலையை அடைய தியானம் சிறந்த வழியாகும். அதற்காக உருவ வழிபாடு தேவையற்றது என்று பொருளல்ல; ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும், குறிப்பாகக் குழந்தைகளுக்கும் உருவ வழிபாடு மிகவும் அவசியமானது.
வாழ்க வளமுடன்!"
No comments:
Post a Comment