துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும்,
சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும்,
கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
ஆலயக் குருக்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்
இன்று நம் நாட்டில் பல திருக்கோவில்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. அதற்குக் முக்கியக் காரணம் நீங்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இதுபோலவே நாட்டிலுள்ள அனைத்துக் கோவில்களும் செயல்பட வேண்டும் என்பதே அடியேனின் ஆவல். நம் நாட்டு ஆலயக் குருக்கள் மிகவும் திறமையானவர்கள்; அவர்களில் பலர் தாயகத்திற்குச் சென்று முறைப்படி ஆகம விதிகளைக் கற்றுத் தேர்ந்துள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். இறைவனுக்கும் நமக்கும் பாலமாக நின்று தொண்டு செய்யும் அவர்களின் பணி மிகவும் உயர்வானது.
நிர்வாகத்தினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:
கால மாற்றத்திற்கேற்பக் குருக்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்குங்கள். அவர்களுக்கும் குடும்பம், கடமைகள் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வருங்கால இளைய தலைமுறையினரும் இப்புனிதப் பணியில் ஈடுபட ஆர்வம் காட்டுவார்கள்.
திருக்கோவில் குருக்களுக்கு ஒரு வேண்டுகோள்:
பூஜைகள் முடிந்த பிறகு, ஒரு பத்து நிமிடமாவது நமது சமயம், வழிபாட்டு முறைகள் மற்றும் கலாச்சாரம் குறித்துச் சிறு சொற்பொழிவு ஆற்றுங்கள். குறிப்பாக, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதனை நடைமுறைப்படுத்துங்கள்.
உதாரணமாக:
• குங்குமம் மற்றும் திருநீறு அணிவதன் முக்கியத்துவம்?
• வாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
• மஞ்சள் நீர் தெளிப்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன?
• பூஜை செய்யும் போது மணி அடிப்பது ஏன்?
• விரதம் இருப்பதன் அவசியம் என்ன?
இதுபோன்ற தலைப்புகளில் நீங்கள் விளக்கமளிக்கலாம். உங்களால் இதனை நிச்சயமாகச் சிறப்பாகச் செய்ய முடியும். இதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் கோவில் நிர்வாகமும் வழங்க வேண்டும்.
ஒரு குறிப்பு: சொற்பொழிவு அதிக நேரம் நீடிக்க வேண்டாம். நேரம் ஆக ஆகக் கேட்பவர்களின் ஆர்வம் குறைந்துவிடும்; பலரும் கடிகாரத்தைப் பார்க்கவோ அல்லது பேசத் தொடங்கவோ வாய்ப்புண்டு. கூட்டத்தில் முதியவர்களும் குழந்தைகளும் இருப்பார்கள் என்பதை மனதில் கொண்டு, சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் பேசுவது உசிதம்.
நிர்வாகத்தினருக்கும் சில ஆலோசனைகள்
நம்மிடையே சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் பலர் உள்ளனர். முடிந்தவரை மாதமொருமுறை அவர்களை ஆலயத்திற்கு அழைத்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தலாம். நாம் அழைப்பு விடுத்தால் அவர்கள் நிச்சயமாக வருவார்கள்; எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஆன்மீகச் சொற்பொழிவுகள் மட்டுமன்றி, வாழ்வியல் மேன்மைக்கான தன்முனைப்புப் பயிற்சிகளையும் (Motivational Sessions) ஆலய வளாகத்தில் நடத்தலாம்.
நீங்கள் பராமரிக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி (தல வரலாறு) நிச்சயம் இருக்கும். அந்தக் கோவில் எப்போது, யாரால், எப்படி உருவாக்கப்பட்டது? அதன் சிறப்புகள் என்ன? போன்ற விவரங்களை முகநூல் (Facebook), எக்ஸ் தளம் (Twitter/X), புலனம் (WhatsApp) மற்றும் மின்னஞ்சல் போன்ற சமூக ஊடகங்கள் வழியாகப் பகிருங்கள். இதன் மூலம் உங்கள் கோவிலின் பெருமை உலகெங்கும் சென்றடையும். இது பக்தர்களுக்கும் ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் பெரும் உதவியாக அமையும்.
அடுத்து, கோவில்களில் பால தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டி கவசம், கந்தர் குரு கவசம் மற்றும் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம், பஞ்சாமிருத வண்ணம் போன்ற தெய்வீகப் பாடல்களை ஒலிக்கச் செய்யுங்கள். அல்லது அந்தந்த ஆலய மூர்த்திகளுக்குரிய மூல மந்திரங்களை மெல்லிய ஒலியில் ஒளிபரப்பலாம்.
இனிவரும் காலங்களில், நம் நாட்டில் புதிதாகக் கோவில்களைக் கட்டுவதைவிட, சிதிலமடைந்துள்ள பழமையான திருக்கோவில்களைப் புனரமைப்பு செய்வதில் கவனம் செலுத்துங்கள். அவற்றை முறையாகப் பராமரித்து, நித்திய பூஜைகள் தடையின்றி நடக்க வழிவகை செய்யுங்கள். மேலும், பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் கோவில்களுக்கு அருகில் சமுதாயக் கூடங்களை (Multi-purpose Halls) கட்டுங்கள். இதன் மூலம் ஆலயங்களின் வருமானம் அதிகரிப்பதோடு, மக்கள் பயன்பாடும் கூடும்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment