Saturday, 18 July 2020

குலதெய்வவழிபாடு....

 




கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்

ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா

வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-

அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.

 

குலதெய்வவழிபாடு


இந்தக் குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. 


யார் இந்தக் குலதெய்வங்கள்? ஒரு காலத்தில் நம்மைப் போல் மனிதர்களாக வாழ்ந்து மறைந்தவர்களே குலதெய்வங்கள் ஆவர். சுருக்கமாகச் சொன்னால், நமது முன்னோர்களே நமது குலதெய்வங்கள். ஊருக்காக உழைத்தவர்கள், பிறரைக் காக்கத் தன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள், நாட்டிற்காக இன்னுயிர் ஈந்தவர்கள், பசிப் பிணியால் வாடிய மக்களுக்கு உதவியவர்கள், கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றியவர்கள், நல்நோக்கத்திற்காகத் தனது செல்வத்தையெல்லாம் தானம் செய்தவர்கள் மற்றும் தங்களுக்குக் கிடைத்த அருட்சக்தியின் மூலம் மக்களின் இன்னல்களைப் போக்கியவர்கள் ஆகியோரை நம் முன்னோர்கள் தெய்வமாக வணங்கினார்கள். 


மறைந்தவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு வணங்க ஆரம்பித்தார்கள். அந்த நடுகல்லுக்கு இறந்தவரின் பெயரையே சூட்டினார்கள். முனியன், கருப்பன், நொண்டி, காத்து, ஐயனார், மதுரை வீரன், முனியாண்டி, மலையப்பன், நீலி, பெரியாச்சி, சின்னாச்சி, மாசி பெரியணசாமி, பேச்சியம்மன், வெள்ளப்பர், கன்னியம்மா, பிடாரி அம்மன், சங்கிலிக் கருப்பன் என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இந்த வழிபாட்டு முறை குடும்பத்திற்குத் குடும்பம் மாறுபடும். அசைவம், சைவம் அல்லது வெறும் பழங்களை மட்டும் வைத்தும் வழிபடுவர். ஒரு சில இடங்களில் நடுகல்லைச் சிலையாகவும், ஒரு சில இடங்களில் ஒளியாகவும் (ஜோதி) வைத்து வழிபடுவார்கள். இந்த வழிபாட்டு முறை ஒரு சங்கிலித் தொடர் போன்றது; இதற்கு ஆரம்பமும் தெரியாது, முடிவும் இருக்காது. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.


எப்பொழுது ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசுகள் இல்லையோ, அத்துடன் அந்த குறிப்பிட்டக் குடும்பத்தின் குலதெய்வ வழிபாடு தடையட நேரிடலாம். "ஏன் பெண் வாரிசுகள் வணங்கக்கூடாதா?" என்ற கேள்வி எழலாம். தாராளமாக வணங்கலாம். ஆனால், ஒரு பெண் திருமணமாகிப் புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது, அந்த வீட்டின் குலதெய்வத்தையே முதன்மையாக வணங்க வேண்டியிருக்கும். ஒருவேளை கணவர் சம்மதித்தால், பெண் தனது பிறந்த வீட்டு குலதெய்வத்தையும் தொடர்ந்து வணங்கலாம்; அதில் தவறில்லை. 


இன்று பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கின்றன. வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமலும், ஏதோ ஒரு தடை இருந்து கொண்டே இருப்பதாலும் வீட்டில் நிம்மதி குறைந்து காணப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் முதன்மைக் காரணம் குலதெய்வ வழிபாடு இல்லாததே ஆகும். ஒவ்வொரு குடும்பமும் குலதெய்வ வழிபாட்டைத் தவறாமல் செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது அல்லது உங்கள் வசதிக்கேற்ப குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வணங்கி வருவது அவசியம். இக்கட்டான சூழ்நிலைகளில் ஓடி வந்து காக்கும் அரணாகத் திகழ்வது நம் குலதெய்வமே; அதன் சக்தி அளப்பரியது.


கர்மவினைப்படி நீங்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தால், உங்கள் குலதெய்வம் சற்று ஒதுங்கி நின்றாலும் உங்களைக் கைவிடாது. உதாரணமாக, ஊழ்வினையின் காரணமாக மூன்று வேளை உணவின்றி கஷ்டப்பட வேண்டிய நிலை இருந்தால், உங்கள் குலதெய்வம் குறைந்தபட்சம் ஒரு வேளை உணவுக்காவது வழிவகை செய்யும். குலதெய்வம் நம்முடன் இருக்கிறது என்பதற்காகத் தெரிந்தே தவறுகளையும், பாவங்களையும் செய்துவிட்டு, பிறகு தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்று எதிர்பார்ப்பது அறியாமையாகும்.


தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், முன்னோர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்று விசாரித்தால் அதைப் பற்றி அறியலாம். ஒருவேளை அப்படியும் தெரியவில்லை என்றால், அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் சென்று பிரசன்னம், சோலி, கட்டம், முத்து அல்லது ஜீவநாடி மூலம் பார்க்கலாம். இதன் மூலம் கண்டிப்பாக உங்கள் குலதெய்வத்தை நீங்கள் கண்டறிய முடியும்."

"எங்கள் குலதெய்வக் கோவில் வெகுதூரத்தில் உள்ளது, எங்களால் அடிக்கடி சென்று வர முடியாது என்பவர்கள், வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் சென்று வர முயற்சி செய்ய வேண்டும். 'நாங்கள் குலதெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?' என்ற கேள்விக்கு, 'தாராளமாக வணங்கலாம்' என்பதே பதில்.


அதேபோல், சிலர் 'கோவிலிலிருந்து திருமண்ணை எடுத்து வந்து பூஜை அறையில் வைக்கலாமா?' என்று கேட்கிறார்கள். அப்படிச் செய்வது கூடாது. ஏனெனில், அந்த மண்ணிற்கு அதிர்வுகள் அதிகமாக இருக்கும்; அதற்கு முறையான நித்திய பூஜைகளைச் செய்ய வேண்டியிருக்கும். எனவே, அதனைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் முன்னோர்கள் எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினார்களோ, அதையே நீங்களும் கடைப்பிடிப்பது மிகச் சிறந்தது. ஒரு குடும்பத் தலைவன், தன் குழந்தைகளுக்குக் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் முறைகளையும் கற்றுத் தர வேண்டும்.


ஒன்று மட்டும் உண்மை; ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யும்போது, உங்கள் முன்னோர்கள் அங்கே அரூபமாக வந்து உங்களை ஆசீர்வதிப்பார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் நேரில் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே வழிபாட்டை மேற்கொள்ளலாம்; முடிந்தால் ஒரு பத்து பேருக்காவது அன்னதானம் வழங்கலாம்.


'எனக்குக் குலதெய்வ வழிபாட்டில் விருப்பமில்லை, எனக்குப் பிடித்த தெய்வத்தையே வணங்குகிறேன்' என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். குலதெய்வத்தை வணங்காவிட்டால் அது நம்மைத் தண்டிக்குமா? என்றால், கண்டிப்பாகத் தண்டிக்காது. ஆனால், அது நம்மை விட்டு ஒதுங்கிவிடும்; அதன் பிறகு வருத்தப்படுவதில் பயனில்லை. ஆகையால், குலதெய்வ வழிபாட்டை முறையாக மேற்கொண்டு, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வீர்களாக!"










No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...