பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம்
செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து
வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும்
உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து
அம்பிகையே.
உங்கள் பார்வைக்கு: வீட்டில் சுவாமி படங்கள் சிதலமடைந்துவிட்டால் என்ன செய்யலாம்?
சிலர் வீட்டில் சுவாமி படங்கள் சேதமடைந்துவிட்டால், அவற்றை ஆலயங்களில் கொண்டு போய் வைத்துவிடுகிறார்கள் அல்லது குப்பையில் வீசிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறான செயலாகும். இத்தகைய செயல்கள் உங்கள் குடும்பத்திற்குத் தோஷத்தை உண்டாக்கும். 'தோஷம்' என்பது ஒரு பாவமான காரியத்தை அறியாமல் செய்வதால் விளைவது. இதனால் குடும்ப முன்னேற்றம் தடைபடக்கூடும்.
சற்று சிந்தித்துப் பாருங்கள்; எந்த தெய்வ உருவத்தை நாம் இத்தனை காலமாய் வழிபட்டு ஆராதனை செய்தோமோ, அதையே பிறகு எப்படிக் குப்பையில் எறிய முடியும்? நம் பெற்றோருக்கு வயதாகிவிட்டாலோ அல்லது அவர்கள் நோயுற்றாலோ நாம் இப்படித்தான் செய்வோமா? அப்படிச் செய்ய நமக்கு மனம்தான் வருமா?
அதேபோல், படங்களைக் கோவில்களில் விட்டுச் சென்றால் அதனை யார் சுத்தம் செய்வது? எல்லோரும் இப்படியே செய்தால் கோவில் முழுவதும் பழுதடைந்த படங்களால் அல்லவா நிறைந்திருக்கும்? நம் வீட்டைச் சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் ஆலயத்தை அசுத்தமாக்குவது அறமாகாது.
இதற்குச் சரியான தீர்வு என்ன?
பழுதடைந்த சுவாமி படத்தின் காகிதத்தை மட்டும் தனியே கழற்றி எடுத்து, நீங்கள் புதிதாக வாங்கும் படத்தின் பின்புறமோ அல்லது வீட்டில் உள்ள மற்ற சுவாமி படங்களின் பின்புறமோ வைத்துவிடலாம். (அல்லது ஓடும் நீரிலோ, கடலிலோ சேர்த்துவிடலாம்).
மாற்று வழிகள்:
சிதலமடைந்த படங்களை அப்புறப்படுத்த இன்னொரு வழி, ஏதாவது ஒரு மரத்தின் அடியில் குழி தோண்டிப் புதைத்துவிடுவது. "நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறோம், எங்கே புதைப்பது?" என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் வீட்டில் வளர்க்கும் பூச்செட்டித் தொட்டிகளிலேயே அதனைப் புதைத்துவிடலாம்.
சுவாமி படங்களை ஒருபோதும் எரிக்கக் கூடாது. தெரியாமல் இதுவரை யாராவது எரித்திருந்தால், எந்தத் தெய்வத்தின் படத்தை எரித்தீர்களோ அந்தத் தெய்வத்தின் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
சட்டங்கள் மற்றும் அட்டைகளை என்ன செய்வது?
சிதலமடைந்த படங்களை என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தோம். அதன் சட்டங்கள் (Frames) அல்லது அட்டைகளை (Boards) வீணாக்காமல், அவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டி வீட்டில் சாம்பிராணி போடும் தூபக்காலில் இட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவற்றையும் மண்ணில் புதைத்துவிடலாம்.
ஆலயங்களை அசுத்தமாக்கும் பழக்கத்தை முற்றிலுமாகத் தவிர்ப்போம். நம் இல்லத்தில் குடியிருந்து நமக்கு அருள்பாலித்த தெய்வத் திருவுருவங்களுக்கு, சிதைந்த பின்பும் முறையான மரியாதையை அளிப்போம்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment