பூத்தவளே,
புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே.
பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே.
என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே.
உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?
குலதெய்வம் (இரண்டாம் பாகம்)
"நான் வெளிநாட்டில் வசிக்கிறேன்; என் குலதெய்வமோ தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் குடி கொண்டுள்ளது. இதற்காக நான் பெரும் தொகையைக் கடனாகப் பெற்றோ அல்லது பல்லாயிரம் ரூபாய் செலவு செய்தோ என் குடும்பத்துடன் அங்குதான் செல்ல வேண்டுமா? அந்தப் பணத்தை நான் இருக்கும் இடத்திலேயே எளியோர்க்கு உதவும் தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தலாமே!
மனதார நினைத்து வழிபட்டாலே தெய்வம் அருள் செய்யும் எனும்போது, நான் இருக்கும் இடத்திலிருந்தே வணங்கினால் அது ஏற்றுக்கொள்ளாதா? வெளிநாட்டில் வசிக்கும் அனைவரும் பெரும் செல்வந்தர்கள் அல்லர். வருடம் ஒருமுறை சொந்த ஊர் சென்று வரத் தேவைப்படும் பெரும் தொகை எங்களுக்கு ஒரு சவால்தான். 'கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும்' குலதெய்வம், உள்நாடு - வெளிநாடு என்று வித்தியாசம் பார்க்குமா என்ன?
நான் செய்யும் தர்மங்கள் என் குலதெய்வத்திற்குத் தெரியாதா? மாதந்தோறும் அநாதைக் குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் நான் செய்யும் உதவிகளைக் கண்டு என் தெய்வம் மகிழ்ந்து என்னை ஆசீர்வதிக்காதா? 'எல்லாமே என் கர்மவினைப்படிதான் நடக்கும்' என்றால், நான் ஏன் தனியாகக் குலதெய்வத்தைத் தேடி அலைய வேண்டும்?
மேலும், எனக்கு அடையாளம் தெரியாத ஒரு தெய்வத்தைப் பற்றிக் குழம்பிக் கொள்வதை விட, எனக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தையே நான் வணங்கலாமே! எங்கோ இருக்கும் கோவிலைத் தேடி அலைவதை விட, என் வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலுக்கே சென்று வரத் தடையில்லையே? ஒருவேளை, குறி சொல்பவர்களோ அல்லது பிரசன்னம் பார்ப்பவர்களோ ஏதேனும் ஒரு தெய்வத்தைத் தவறாகக் காட்டிவிட்டால் அதற்கு நான் என்ன செய்வது?"
கேள்வி:
"என்னுடைய காலத்தில் நான் இந்தக் குலதெய்வ வழிபாட்டைச் செய்து வருகிறேன். ஆனால், எனக்குப் பிறகு என் குழந்தைகள் இதனைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா? அவர்களுக்கு இதில் விருப்பம் இல்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்? அதற்காக அந்தத் தெய்வம் என்னைத் தண்டிக்குமா? அல்லது என் குழந்தைகளைத்தான் பாதிக்குமா?
தினமும் நான் குலதெய்வத்தின் திருநாமத்தைச் சொல்லி வணங்கி வந்தாலே அத்தெய்வம் ஏற்றுக்கொள்ளாதா? குலதெய்வம் மகா சக்தி வாய்ந்தது என்றால், நிச்சயம் என்னுடைய சூழ்நிலையை அது உணர்ந்திருக்குமே?"
பதில்:
"குலதெய்வத்தைத் தரிசிக்க உங்களை யாரும் கடன் வாங்கிச் செலவு செய்யச் சொல்லவில்லை. வசதி வாய்ப்புகள் அமையும் போது மட்டும் நீங்கள் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்யலாம். உங்கள் பெற்றோர்கள் தொலைதூரத்தில் இருந்தால், வருடம் ஒரு முறையாவது அவர்களைச் சென்று பார்ப்பீர்கள் அல்லவா? குலதெய்வ வழிபாடும் அத்தகைய ஒரு கடமைதான்.
உங்களைப் பற்றியும், உங்கள் வாழ்வின் சூழ்நிலைகளைப் பற்றியும் குலதெய்வத்திற்கு நன்றாகவே தெரியும். குலதெய்வம் மகா சக்தி வாய்ந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். நிச்சயமாக நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு அது ஓடி வரும். நீங்கள் பிறருக்குத் தான தர்மங்கள் செய்வது மிகவும் உன்னதமான காரியம்.
இருப்பினும் ஒரு சிறிய மாற்றம்: அந்தத் தர்மங்களைச் செய்யும்போது, உங்கள் குலதெய்வத்தின் பெயரால் அதனைச் செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது, குலதெய்வம் உங்களை முழுமையாக ஆசீர்வதிக்கும். நிச்சயமாக இது உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்!"
"உங்கள் குலதெய்வம் யாரென்று தெரியாத பட்சத்தில், நீங்கள் தாராளமாக உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதார வணங்கி வரலாம்; அதில் எந்தத் தவறும் இல்லை.
பெற்றோராக உங்கள் கடமை, உங்கள் குழந்தைகளுக்குக் குலதெய்வம் யார் என்பதை அடையாளம் காட்டுவது மட்டுமே.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment